ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்படும் இந்தியத் திரைப்படமாக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது `கூழாங்கல்’. அறிமுக இயக்குநரான பி.எஸ்.வினோத்ராஜ் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். 


``கூழாங்கல்’ திரைப்படம் ஒவ்வொரு திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைப் பெற்ற போதும், நான் இப்படியான வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. இயல்பான, உண்மையான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தப் படத்தை உருவாக்கினோம்’ என்று கூறுகிறார் இயக்குநர் வினோத்ராஜ். அப்பாவின் வன்முறைக்கு பயந்து அம்மா வீட்டை விட்டு வெளியேறிவிட, சிறுவனான மகன் அதனை எதிர்கொள்வது தான் `கூழாங்கல்’ படத்தின் கதை. 


The News Minute தளத்துக்கு பேட்டியளித்துள்ள வினோத்ராஜ், `இதுபோன்ற திருமணங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். எனது சகோதரிகளும் இதே நிலையை அனுபவித்தனர். எங்கள் கிராமத்தில் இப்படி பாதிக்கப்படும் பெண்களிடம் `இருந்து கழிச்சிடு’ என்று கூறி, எந்த வாய்ப்பும் இல்லாமல் குழந்தைகளுக்காகப் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலில் வளரும் குழந்தைகளின் மனநிலையும் வெகுவாகப் பாதிக்கப்படும். தான் பார்த்து வளர்ந்த வன்முறையைச் சுற்றியே இந்தக் குழந்தைகளின் உலகப் பார்வை உருவாகும். அப்படியான குழந்தையின் கதையாக இந்தப் படத்தை உருவாக்க விரும்பினேன். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனம் இருந்தாலும், தன் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அத்தகைய குழந்தைகளிடம் இருக்கும். எனவே இந்தக் கதையை ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து சொல்லியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் 



தனது தங்கையின் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது தனது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் இயக்குநர் வினோத்ராஜ் தெரிவித்துள்ளார். `அக்கா, தங்கைகளுடன் வாழும் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் இப்படியான பிரச்னைகளை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதனால் தான் தானாகவே இதுகுறித்த விழிப்புணர்வு தோன்றியிருக்கலாம் என நினைக்கிறேன். என்ன நடந்தாலும், பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான்’ என்று இதுகுறித்து பேசியுள்ளார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். 


12 ஆண்டுகளுக்கு முன்பு, திரைப்படக் கனவுகளோடு சென்னை வந்த வினோத்ராஜ் தொடக்க காலத்தில் டிவிடி கடை ஒன்றில் பணியாற்றியுள்ளார். `ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பது எனது கனவு. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் டிவிடி கடைகளைத் தேடி வருவார்கள் என்பதால் டிவிடி கடையில் விற்பனையாளராகப் பணியில் இணைந்தேன். அங்கு பரிச்சயமான கிஷோர் மூலமாக `நாளைய இயக்குநர் 3’ நிகழ்ச்சியில் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற முயன்று, இறுதியில் இயக்குநராக மாறியுள்ளேன். டிவிடி கடையில் பணியாற்றிய போது, இயக்குநர் சற்குணத்தைச் சந்தித்து, அவர் இயக்கிய `மஞ்சப்பை’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினேன். இவ்வாறு தொடங்கியது என் பயணம்’ என்று தன் வாழ்க்கையைக் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் வினோத்ராஜ். 



கோவாவின் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தில் இயக்குநர் ராமின் சந்திப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ். அவரின் முயற்சியால் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோர் `கூழாங்கல்’ படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளனர். நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளும் அனுமதிக்கப்படுவதால், `கூழாங்கல்’ திரைப்படம் திரையரங்குகளில் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்.