தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன் நடராஜன். 1980 முதல் 90 காலகட்டத்தில் வெளியான ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் நடராஜன் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். இவர் சொந்தமாக ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்.

விஜய், அஜித் பட தயாரிப்பாளர்:


1986ம் ஆண்டு நடிகை நதியா மற்றும் சுரேஷ் நடிப்பில் உருவான பூக்களை பறிக்காதீர்கள் என்ற படம் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். அந்த படத்தை அவர் தரங்கை சண்முகத்துடன் இணைந்து தயாரித்தார். பின்னர், அவரது தோற்றம் காரணமாக அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.


நல்ல வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் சரத்குமாரின் நம்ம அண்ணாச்சி, விஜயகாந்தின் சக்கரைத் தேவன், கமல்ஹாசனின் மகாநதி, அஜித்தின் சிட்டிசன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், பட்டியல் என பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

பிரபல வில்லன்:


வில்லனாக பல படங்களில் நடித்துள் இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். பூக்களை பறிக்காதீர்கள் படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமான இவர் நடிகர் பிரபுவின் என் தங்கச்சி படிச்சவ, சத்யராஜின் வேலை கிடைச்சுடுச்சு, அருண் பாண்டியனின் கோட்டை வாசல், விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படத்திலும் இணைத் தயாரிப்பாளராக பங்காற்றியுள்ளார்.


பிரபல நடிகர்களுடன் நடித்ததுடன், பிரபலங்களை வைத்து படங்களைத் தயாரித்துள்ள மோகன் நடராஜன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலி இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.