தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஒரு பிரேக்த்ரூ படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று. 


பிக்பாஸ் பப்ளிசிட்டி:


சிறு வயது முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹரிஷுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமான 'சிந்து சமவெளி' என்ற முதல் படமே சர்ச்சையில் சிக்கியது. அதன் பாதிப்பு அவரை மூன்று ஆண்டுகள் வரை முன்னேற விடாமல் தடுத்தது. ஹரிஷுக்கு மிக நல்ல கம் பேக்காக அமைந்தது பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி. வைல்ட் கார்டு போட்டியாளராக களம் இறங்கிய ஹரிஷ் கல்யாண் மக்கள் மனதில் ஒரு உறுதியான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினார். அதற்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு செபிரிட்டியாக மாறினார். பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வர துவங்கின.


 




பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் சக போட்டியாளரான ரைசா வில்சன் உடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்து இருந்தார். அப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற வெற்றி படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை ஈட்டியது. அதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த மாறுபட்ட காதல் கதையை கொண்டு வெளிவந்த வந்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படமும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது. 


2020ம் ஆண்டு வெளியான 'தாராள பிரபு' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் திடீரென வந்த கொரோனாவால் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று பயங்கரமான ஒரு வெற்றியை பெற்றது.  


முன்னணி நடிகராக போராட்டம்:


இது போல பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் அவரால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர முடியவில்லை. கதையை நேர்த்தியாக தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முன்னணி பட்டியலில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. 



தொடர்ச்சியாக கசட தபற, ஓ மணப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் உள்ளிட்ட பல படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதுடன் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. 


கடந்த 2022ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது லப்பர் பந்து, டீசல், நூறு கோடி வானவில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த பிறந்தநாள் அவருக்கு சிறந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!