ஐ. வி. சசி இயக்கத்தில் 1995ம் ஆண்டு இன்றைய தேதியில் வெளியான தமிழ் திரைப்படம் "கோலங்கள்". ஹென்றி தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் இசைஞானி இளையராஜா. நடிகர் ஜெயராம், குஷ்பூ, ரகுவரன், ராஜா, கஸ்துரி, சரத் பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
படத்தின் ஆரம்பமே குளறுபடி :
"கோலங்கள்" படம் தொடங்குவதற்கு முன்னரே பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. இப்படத்தின் தயாரிப்பு சமயத்தில் முதலில் பிரதாப் போத்தன் இயக்குவதாகவே பேசப்பட்டது. அந்த சமயத்தில் மிகவும் ஸ்மார்ட் ஹீரோவாக இருந்த அரவிந்சாமி ஹீரோவாக நடிக்க உள்ளார் என பல வதந்திகள் பரவின. பின்னர் இயக்குனர் பரதன் "கோலங்கள்" படத்தை இயக்குவார் என கூறிய நிலையில் கடைசியில் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்று கொண்டார் ஐ. வி. சசி. இப்படம் ஒரு குடும்பம் சார்ந்த கதையாக படமாக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் 1995ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் விருதினை தட்டி சென்றது. படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். இப்படம் மலையாளத்திலும் வெற்றி படமாக அமைந்தது.
நடிகை குஷ்பூ பெற்ற விருது:
ஹிந்தி தெரியாத தமிழ்ப்பெண்ணான நடிகை குஷ்பூ மும்பையில் உள்ள தனது தோழியை சந்திக்க செல்லும் இடத்தில் குஷ்பூ மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டு சிக்கி தவிப்பார் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த நடிகர் ஜெயராம். கடைசியில் இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது படத்தின் சுருக்கமான திரைக்கதை. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர் குஷ்பூ மற்றும் ஜெயராம். மேலும் நடிகை குஷ்பூவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூ - ஜெயராம் ஜோடி :
குஷ்பூ - ஜெயராம் இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். இவர்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளர்கள். மனசு ரெண்டும் புதுசு, புருஷ லட்சணம், முறைமாமன் என அவர்கள் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்ற பிரபலமான படங்கள். இவர்கள் இருவருமே தற்போது மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்கள்.
வித்தியாசமான கெட்டப்பில் ஜெயராம் :
தற்போது ஜெயராம், "பொன்னியின் செல்வன் 1 " திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு வித்யாசமான கெட்டப்பில் ஆழ்வார்க்கடியன் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். இதை தவிர பல மலையாள படங்களில் நடித்து வருகிறார் ஜெயராம்.
ரஷ்மிகா மந்தனாவின் தாயாக குஷ்பூ :
மறுபுறம் நடிகை குஷ்பூ காபி வித் காதல், காதல் முடிச்சு, சங்கராபுரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர டோலிவுட்டில் "அடவாலு மீக்கு ஜோஹார்லு" எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயாக நடிக்கவுள்ளார்.