தென்னிந்திய சினிமா கண்ட ஒரு மாபெரும் வில்லன் நடிகர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகர் ரகுவரனாகத்தான் இருக்க முடியும். பெரிய அளவில் வசனங்கள் பேசாமல் முகத்தில் கொடூரமான உணர்ச்சியையும் குரலில் ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் காட்டி திரையை தாண்டியும் பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்தி விட கூடிய அசாத்தியமான நடிகர் ரகுவரன். இந்த ஈடு இணையில்லா ஒன் அண்ட் ஒன்லி கலைஞனின் பிறந்தநாள் இன்று.

  


ஆர்ப்பாட்டமில்லாத அசத்தலான நடிகர் ரகுவரனின் பிறந்ததினத்தில் அவரை பற்றி சில அறியப்படாத தகவல்களை பார்க்கலாம். 


* ஒரு நடிகனின் வெற்றி என்பது அவர் நடித்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் அவனை விட சிறப்பாக நடிக்க முடியாது என்பதில் தான் உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பை யாருக்கும் கொடுக்காத ஒரு தன்னிகரில்லா நடிகர் ரகுவரன். அவருக்கு இணையான ரீ மேக் வரமுடியுமா சொல்லுங்கள்... 



* நடிகர்கள் ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால் என அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த ரகுவரன் கடைசி வரையில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவே இல்லை. 


* 'ஏழாவது மனிதன்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான ரகுவரனுக்கு கடைசி படமாக அமைந்தது 'சில நேரங்களில்' திரைப்படம். இப்படத்தில் தனது சைக்கோத்தனமான மருத்துவர் கேரக்டரில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்து இருப்பார்.  


*தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள ரகுவரன் தனது அசரவைக்கும் நடிப்பாற்றலால் தென்னிந்தியாவின் அல் பசினோ என அழைக்கப்பட்டார்.  



* 10-வது படிக்கும் போதே ஒரு இசை ட்ரூப்பில் கிட்டாரிஸ்டாக இருந்துள்ளார். அவருக்கு கிட்டார் வாங்கித்தர வேண்டும் என்பதற்காக  தன்னுடைய தங்க வளையலை விற்று மகனுக்கு கிட்டார் பரிசளித்துள்ளார் அவர் தாய். 


* இசைஞானி இளையராஜாவின் குருவான தன்ராஜிடம் தான் நடிகர் ரகுவரனும்  இசை பயின்றுள்ளார். மேலும் இளையராஜாவின் இசை ட்ரூப்பில் 200 ரூபாய் சம்பளத்தில் ரகுவரனும் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார். 


* தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'ஒரு மனிதனின் கதை' என்ற சீரியல் மூலம் தான் நடிகர் ரகுவரன் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். 


* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே நடிகர் ரகுவரனுக்கும் ஜப்பான் நாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். எப்போது எல்லாம் ஜப்பான் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வருகிறார்களோ அப்போதெல்லாம் தவறாமல் நடிகர் ரகுவரனையும் அவரின் வீட்டுக்கு சென்று சந்திப்பார்களாம்.


 



* நடிகர் ரகுவரனின் நடிப்பில் அட்டகாசமான காட்சிகள் பல இருந்தாலும் அவரின் ட்ரேட்மார்க் வசனம் என்றால் அது புரியாத புதிர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'I Know' காட்சிதான். உண்மையில் அந்த காட்சி மிகவும் நீளமானது என்பதால் அந்த வசனத்தை ரகுவரன் 'I Know ' என மாற்றினாராம். 


* பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிகர் ரகுவரன் நடித்திருந்தாலும் அவரின் வில்லத்தனமும், குணசித்திர கதாபாத்திரமும்தான் அவரின் அடையாளமானது. 


* எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் வரை அதே கதாபாத்திரமாக நிஜ வாழ்க்கையிலும் வாழக்கூடியவராம் ரகுவரன். பாட்ஷா படத்தின் நடிக்கும் போது அதே வில்லத்தனுடன் தான் வீட்டிலும் இருந்துள்ளார் அதேபோல அஞ்சலி போன்ற சாஃப்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது வீட்டிலும் அமைதியானவராக, பொறுமையானவராக இருந்தாராம்.