சினிமா வரலாற்றை பொறுத்தவரையில் ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்களுக்கு குறைந்த அளவிலான சம்பளமே வழங்கப்படுகிறது. அந்த வழக்கத்தை மாற்றி காட்டியவர் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. சக ஹீரோவை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை. இன்றும் இந்த பிரச்சினை நீடித்து கொண்டே தான் இருக்கிறது. ஹீரோக்களுக்கு தான் தயாரிப்பாளர்கள் முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். ஆனால் அந்த தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வெற்றி நடை போடுகிறார் ஒரு ஹீரோயின். 




பாலிவுட் திரையுலகை பொறுத்தவரையில் தீபிகா படுகோன், ஆலியா பட் முக்கியமான ஒரு இடத்தை தக்க வைத்து இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஹீரோக்களை காட்டிலும் அதிகமல்ல. அந்த இடத்தை  பிடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 40 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ வெப் சீரிஸுக்காக அவர் 40 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கு 14  முதல் 20 கோடி ரூபாய்  வரை பெறுகிறார் என ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. 



2010 காலகட்டத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி மற்றும் தில் தடக்னே தோ  என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலத்தின் உச்சத்தில் இருந்தார். 2017ம் ஆண்டு ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த 'பே வாட்ச்' திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து அவருக்கு பல ஹாலிவுட் வாய்ப்புகள் குவிந்தன. பிரியங்கா சோப்ரா நடித்த எ கிட் லைக் ஜேக், இஸ்னாட் இட் ரொமாண்டிக், வீ கேன் பி ஹீரோஸ், தி மேட்ரிக்ஸ் ரீசர்ரக்ஷன்ஸ் மற்றும் லவ் அகெய்ன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 


அதற்கு பிறகு மீண்டும் அவர் நடித்த 'தி ஸ்கை இஸ் பிங்க்' மற்றும் நெட்ஃபிக்ஸ் படமான 'தி ஒயிட் டைகர்' நல்ல பாராட்டுகளை பெற்று கொடுத்தது. அவர் நடித்த சிட்டாடல் இணைய தொடர் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிக அளவிலான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. 250 மில்லியன் டாலர்கள் கொண்ட பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் விமர்சன ரீதியாக பார்வையாளர்களின் கவனத்தை பெற தவறியது. இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது தி பிளஃப், ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட், ஷீலா, எண்டிங் திங்ஸ் மற்றும் கவ்பாய் நிஞ்ஜா வைக்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 



பிரியங்கா சோப்ரா அடுத்த இடத்தில் ரூ.15-30 கோடி வரை சம்பளம் வாங்கும் பக்கெட் லிஸ்டில் தீபிகா படுகோன் இருக்க அவருக்கு அடுத்த இடத்தில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்கள் கத்ரீனா கைஃப் மற்றும் கங்கனா ரனாவத்.


இவர்களுக்கு அடுத்த நிலையில் 10 முதல் 20 கோடி வரை சம்பளமாக வசூல் செய்கிறார்கள் பிரபலமான பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நடிகைகள் என கூறப்படுகிறது. 



தென்னிந்திய நடிகைகளும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களும் பாலிவுட் நடிகைகளுக்கு சமமாக இருக்கிறார்கள். நடிகை நயன்தாரா 'ஜவான்' படத்தில் நடிக்க 10 கோடி சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது. நடிகை திரிஷா 'தக் லைஃப்' படத்திற்காக 12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.