விஜய்யின் பீஸ்ட் படமும் யாஷின் KGF 2 படமும் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. KGF படக்குழுவினர் ராக்கெட் வேகத்தில் ப்ரமோஷன்களை தொடங்கிவிட்ட நிலையில் சன்பிக்சர்ஸ் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பெரியளவில் ப்ரோமோஷன்களையும் செய்யவில்லை என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சன்பிக்சர்ஸுக்கும் விஜய்க்கும் முரண்பாடுகள் இருப்பதாக சில வதந்திகளும் உலாவி வரும் சூழலில் சன்பிக்சர்ஸ் + விஜய் இந்த கூட்டணியின் ட்ராக் ரெக்கார்ட் எப்படியிருந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.


2006-11 திமுகவின் ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ரொம்பவே தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. சிறிய படங்கள் முதல் சூப்பர் ஸ்டார் படங்கள் வரை பல படங்களின் உரிமையை மொத்தமாக வாங்கி தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து வந்தது. ஏறக்குறைய தமிழ் சினிமாவின் அத்தனை நடிகர்களின் படங்களுமே  சன்பிக்சர்ஸ் பேனரில் வெளியாகியிருந்தது. அந்த காலக்கட்டத்தில் விஜய்யின் படங்களுமே சன்பிக்சர்ஸால் வெளியிடப்பட்டிருக்கிறது.


முதல் முறையாக ஏவிம் நிறுவனம் தயாரித்திருந்த விஜய்யின் வேட்டைக்காரன் படம் சன்பிக்சர்ஸால் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான இசை வெளியீட்டு விழாக்களும் சிறப்பு நிகழ்ச்சிகளுமே அப்போது நிறுவனம் சார்ந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருந்தது. வேட்டைக்காரன் படத்திற்கு விஜய் ஆண்டனி போட்டிருந்த அத்தனை பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதற்கு அந்த நிறுவனம் சார்ந்த சேனல்களில் தொடர்ச்சியாக அந்த பாடல்களும் டிரெய்லரும் ஒளிபரப்பப்பட்டது மிகமுக்கிய காரணமாக இருந்தது. சுமாரான படம் என்றாலும் பாடல்கள் ஹிட் அடித்ததால் வேட்டைக்காரன் படமும் ஓரளவுக்கு நல்ல வெற்றியையே பெற்றிருந்தது. 2009 இல் வேட்டைக்காரன் வெளியாகியிருந்தது. அடுத்த ஆண்டிலேயே விஜய்யின் 'சுறா' படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டது. இந்த படத்தை விஜய்க்கு நெருக்கமான சங்கிலி முருகன் தயாரித்திருந்தார். இது விஜய்யின் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்தது. ஆனால், சுறா விஜய்யின் கரியரிலேயே மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதில், விஜய் தரப்புக்கும் படத்தை வெளியிட்ட தரப்புக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் உண்டு. இந்த பிரச்சனை 2011 இல் வெளியான விஜய்யின்  அடுத்த படமான காவலன் வெளியாகும் வரை தொடர்ந்ததாகவும் காவலன் படமே திட்டமிட்டபடி வெளியாகாமல் ஒரு சில நாட்கள் கழித்தே வெளியாகியது.


இந்த சமயத்தில் திரைக்கு வெளியே இன்னொரு சம்பவம் நடந்தது. 2011 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சியும் நேரடியாக அதிமுகவிற்கு ஆதரவு தந்தனர். விஜய்யின் மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியது. 


தேர்தல் முடிந்தது. அதிமுக வென்றது. சன்பிக்சர்ஸும் மெது மெதுவாக படங்கள் வெளியிடுவதை குறைத்து ஒருகட்டத்தில் மொத்தமாகவே நிறுத்தியது. காலங்கள் ஓடின. சிலபல ஆண்டுகளுக்கு பிறகு சன்பிக்சர்ஸ் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்தது. 2006-11 காலக்கட்டத்தில் சன்பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை மட்டுமே சொந்தமாக தயாரித்திருந்தது. மற்ற படங்களை விநியோகம் மட்டுமே செய்திருந்தது. இப்போது சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகிற்கு எண்ட்ரி கொடுக்கும்போது படங்களை தயாரித்தே வெளியிடும் முடிவோடு வருகின்றனர். ரீ எண்ட்ரி மாஸாக இருக்க வேண்டும் என்பதால் பெரிய நடிகர்களை வைத்தே படம் தயாரிக்க நினைக்கின்றனர். அந்த வகையில் சன்பிக்சர்ஸ் அணுகிய முதல் நடிகர் விஜய்யே. நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்தமாக தயாரித்த முதல் படம் 'சர்கார்'. 'துப்பாக்கி' 'கத்தி' என பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியோடு சன்பிக்சர்ஸும் கைக்கோர்த்தது. 


'சர்கார்' படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக நடத்தியது. ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் திரண்டிருந்தனர். படத்திற்கான பாடல்களை ரசிகர்களே வெளியிடும் வகையில் ஒரு வெப்சைட்டையெல்லாம் உருவாக்கி அதகளப்படுத்தியிருந்தார்கள். வழக்கம்போல இந்த விழாவில் விஜய்யின் மேடைப்பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. 'முதலமைச்சர் ஆனா நடிக்கமாட்டேன்' என மேடையில் விஜய் ஒரு போடு போட்டார். அது பலவிதமான விவாதங்களை கிளப்பிவிட்டது. படத்திற்கும் நல்ல மைலேஜாக அமைந்தது. படமும் வெளியானது. முந்தைய மெர்சல் படத்தை போன்றே இதுவும் நல்ல வசூலை அள்ளியது. கூடவே சர்ச்சைகளும் ஒட்டிக்கொண்டது. படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக அப்போதைய ஆளும்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தியேட்டர்களில் விஜய்யின் பேனர்களை கிழித்து தொங்கவிட்டனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படலாம் என்ற சூழலும் உருவானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சூப்பர் ஸ்டார் உட்பட பிரபலங்கள் பலரும் சர்காருக்கு ஆதரவாக பேசினர்.


2018 இல் சர்கார் வெளியான நிலையில் 'பிகில்', 'மாஸ்டர்' என்ற இரண்டு படங்களை முடித்துவிட்டு மீண்டும் சன்பிக்சர்ஸுக்கே விஜய் கால்ஷீட் கொடுக்க, நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' உருவானது. வேட்டைக்காரன், சுறா, சர்கார் என சன்பிக்சர்ஸ்-விஜய் கூட்டணியில் வெளியான படங்களில் சில வசூல்ரீதியாக நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும், விஜய்யின் ப்ளாக்பஸ்டர் ஹிட்களான கில்லி, துப்பாக்கி, கத்தி போன்று ஒட்டுமொத்தமாக அத்தனை தரப்பு ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை இந்த 'பீஸ்ட்' படம் போக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கூடவே KGF வெளியாவதால் அந்த படத்தை விட பீஸ்ட் தரமாக இருந்து அனைவரையும் கவர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதனாலயே இன்னும் அதிகமாக விளம்பரம் செய்யுமாறு பட நிறுவனத்திற்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.