கிசி கா பாய் கிசி கி ஜான்:


தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளில் ஹிட் அடிக்கும் பல படங்கள், இந்தியில் ரீமேக் செய்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. ஆனால், இங்கு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் இந்தியில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற காஞ்சனா மற்றும் ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்தியில் படுதோல்வியை சந்தித்துள்ளன. அந்த வரிசையில் தான் கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான போலா திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே கடும் விமர்சனங்களை பெற்றது. அதற்கு சற்றும் சளைக்காத வகையில், வீரம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆன கிசி கா  பாய் கிசி கி ஜான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



டிரெய்லர் சொல்வது என்ன?


சல்மான் நடித்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். கிசி கா  பாய் கிசி கி ஜான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வீரம் படத்தின் ரீமேக் என கூறப்பட்டாலும், இந்த டீசரை எப்படி பார்த்தாலும் அதில் வீரம் படத்தின் சாயல் சற்றும் தெரியவில்லை. நீளமான முடியை வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் சிட்டி ரோபோவை போன்று துள்ளிக் குதிக்கும் சல்மான் கான், வழக்கம்போல் பல எதிரிகளின் எலும்புகளை உடைத்துள்ளார். ஒரு தூணையே உதைத்து உருட்டி விட்டு, காரை பறக்கவிடுவது போன்ற, சல்மான் கானுக்கே உரித்தான ஆக்‌ஷன் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. முழுமையாக கிராமத்து கதைகக்களத்தின் அடிப்படையில் உருவான வீரம் படத்திற்கும், இந்த ரீமேக்கிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என ஆச்சரியப்படும் வகையில் தான் சல்மான் கானின் கிசி கா  பாய் கிசி கி ஜான் படத்தின் டீசர் அமைந்துள்ளது. ஈகை திருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.


வீரம் திரைப்படம்:


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி, 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். நான்கு தம்பிகளுக்கு அண்ணனான அஜித், தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க செல்கிறார். அங்கு அந்த குடும்பத்திற்கு வரும் ஆபத்தில் இருந்து அவர்களை நாயகன் மீட்டாரா, இல்லையா என்பது தான் வீரம் படத்தின் கதை. இதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி உருவாக்கி இருந்தது. ஆனால், ஹாலிவுட்டிற்கே உரிய கூடுதல் மசாலாவை சேர்த்து, சல்மான் கான் நடிப்பில் இந்த திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. முன்னதாக, தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் வீரம் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.