நடிகரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியாக இயக்குநர் கிருத்திகா மீண்டும் படம் இயக்கவுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கடந்த 2013 ஆம் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ”வணக்கம் சென்னை” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா. நடிகர், அமைச்சர் உதயநிதியின் மனைவியான இவரின் இயக்கம் முதல் படத்திலேயே மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் கழித்து விஜய் ஆண்டனியை வைத்து “காளி” படத்தை எடுத்தார். வித்தியாசமான திரைக்கதையால் இப்படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. 


இதனையடுத்து கடந்த ஆண்டு காளிதாஸ்  ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்திற்காக “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பெரிய திரையில் கிருத்திகா உதயநிதி படம் இயக்க ரெடியாகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கும் நிலையில் ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். 






ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்துக்கு “காதலிக்க நேரமில்லை” என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக 1964 ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் அதே பெயரில் விஜய் டிவியில் சீரியல் ஒன்றும் ஒளிபரப்பானது. இப்படியான நிலையில் 59 ஆண்டுகள் கழித்து காதலிக்க நேரமில்லை என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 


இதனிடையே இந்தாண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், பொன்னியின் செல்வன் 2, இறைவன் ஆகிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் அடுத்து நடிக்கும் ஜீனி, சைரன், பிரதர், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் ஆகிய படங்களை ரசிகர்களுக்கு திருப்தி தரும் வகையில் கொடுக்க வேண்டும் என்ற வகையில் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில் தான் காதலிக்க நேரமில்லை பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம ட்ரீட் காத்திருக்கிறது.