பிரபல நடிகர் துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தன் தாய் மொழியான மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி என மாறுபட்ட கதாபாத்திரங்களில் மாஸ் காண்பித்து நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் நடிகர் துல்கர் சல்மான்.
துல்கரின் ஆக்ஷன் விருந்து
அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்து தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டுள்ள துல்கர் சல்மான் பொதுவாக சாக்லேட் பாயாகவே ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துல்கர் ‘கிங் ஆஃப் கோதா’ படம் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரபல மலையாள இசையமைப்பாளர்கள் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிகர் பிரசன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, டான்சிங் ரோஸ் ஷபீர், செம்பன் வினோத், நைலா உஷா, அனிகா சுரேந்திரன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
வெளியான டீசர்
இப்படத்தின் டீசர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று மாலை இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
“இது காந்தி கிராமம் இல்ல, கோதா... இங்க நான் சொல்றது தான் பகல், நான் சொல்றது தான் ராத்திரி” எனும் துல்கரின் வசனங்கள் இந்த டீசரில் மாஸாக அமைந்து கவனமீர்த்துள்ளன. மேலும் பீரியட் கேங்க்ஸ்டர் கதாபாத்திரங்களாக அனைத்து நட்சத்திரங்களும் ரெட்ரோ லுக்கி மாஸ் காண்பித்துள்ள நிலையில், இந்த டீசர் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
கதாபாத்திரங்களின் பெயர்கள்
முன்னதாக இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சார்பட்டா படத்தில் டான்ஸின் ரோஸாக கலக்கி இதயங்களை வென்ற மலையாள நடிகர் ஷபீர், இப்படத்தில் கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் கோலிவுட் நடிகர் பிரசன்னா ஷாகுல் ஹாசன் எனும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் வில்லனாகக் களமிறங்கியுள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தாரா எனும் கதாபாத்திரத்திலும், நைலா உஷா மஜ்னு எனும் கதாபாத்திரத்திலும், செம்பன் வினோத் ரஞ்சித் எனும் கதாபாத்திரத்திலும், அனிகா சுரேந்திரன் ரித்து எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த கதாபாத்திர அறிமுக வீடியோவில் துல்கரின் கதாபாத்திரப் பெயர் வெளியிடப்படாத நிலையில், டீசரிலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் மேலும் சில அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.