அமெரிக்காவின் மிகப்பெரிய பிரபலங்களுள் ஒருவர், கிம் கர்டாஷியன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வழக்கமாக இப்படிப்பட்ட பிரபலங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அவர்களைப்பாேல மாற விரும்பி சில செயல்களை செய்வர். இன்னும் சிலர், அந்த பிரபலத்தை போலவே முக அமைப்பு வேண்டும் என ஆசைகொண்டு, முகமாற்று அறுவை சிகிச்சை முதல் பல செயல்களை செய்வர். அப்படி கிம் கர்டாஷியன்போல மாறிய மாடல் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கிம் கர்டாஷியனின்போல உருவம் கொண்ட மாடல்:


கிரிஸ்டினா ஆஷ்டன் கூர்கனி என்ற மாடல், கிம் கர்டாஷியன்போல மாற விரும்பி பல முகமாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவர். இவருக்கு 34 வயதாகிறது. இவருடைய இறப்பு, தவறான பிளாஸ்டிக் சர்ஜரியில் நிகழ்ந்திருக்கலாம் என கிரிஸ்டினாவின் குடும்பத்தாரின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 


கிரிஸ்டினாவின் குடும்பத்தினர், அவரது நினைவேந்தலுக்கு GoFundMe என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நிதி திரட்டி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், கடந்த வாரம் கிரிஸ்டினாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அதைக் கேட்டவுடன் இடி விழுந்தது போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 




நடந்தது என்ன? 


கிரிஸ்டினா, கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், அவரது குடும்பத்தினர்கள் அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்துள்ளனர். அப்போது, அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். அதன் பிறகு, நேற்று கிரிஸ்டினா உயிரிழந்துள்ளார். 


கிரிஸ்டினாவின் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய தகவல்களின்படி, கிரிஸ்டினா தவறான முகமாற்று அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால்தான் அவர் இறந்திருப்பார் என நம்பப்படுகிறது. இது தவிர பிற தகவல்களை கொடுக்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக அந்த நாட்டின் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 




ரசிகர்கள் சோகம்:


கிரிஸ்டினாவை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு அவரது இறப்பு செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு குறித்த உண்மை வெளிவரும்வரை காவல் துறையினர் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என கிரிஸ்டனாவின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கிரிஸ்டினாவின் இறப்பு தங்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கிரிஸ்டினாவின் நினைவாக அவரது ரசிகர்களும் குடும்பத்தினரும் GoFundMe என்ற பெயரில் பேரணி நடத்தவுள்ளனர்.


மற்றுமொரு இறப்பு!


தென்கொரிய இசைக்குழுவில் உள்ள பிரபல இசைக்கலைஞர் ஜிமினைப் போல மாற விரும்பி, கெனடிய நடிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் சமீபத்தில்தான் நடந்தது. கெனடா நாட்டைச்சேர்ந்த அவர், இசை மற்றும் சினிமா மீதிருந்த ஆசையால் தென்கொரியாவிற்கு வந்தார். 22 வயது மட்டுமே நிரம்பிய அந்த இளைஞர் மூக்கு மாற்று அறுவை சிகிச்சை, உதட்டுக்கான அறுவை சிகிச்சை, மூக்கிற்கான அறுவை சிகிச்சை என 19 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதில் சோகம் என்னவென்றால், அந்த சிகிச்சைகளினால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை தெரிந்தே அவர் இதுபோன்ற சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்தார். தங்களுக்கு பிடித்த பிரபலங்கள்போல மாற விரும்புபவர்கள், இதுபோன்ற ஆபத்தான அறுவை சிகிச்சைகளினால் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.