கன்னட நடிகர் தர்ஷன் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்திற்கு பிரபல நடிகர் கிச்சா சுதீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


பிரபல நடிகர் தர்ஷன் 2000 ஆம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கிராந்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் ரவி கிருஷ்ணா இயக்கும் இப்படத்துக்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு திரைக்கு வரும் இப்படத்தில் ஹீரோயினாக ரசிதா ராம் நடித்துள்ளார். 






இதனிடையே கிராந்தி படத்தில் இருந்து பாடல் ஒன்று கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இதற்கான நிகழ்ச்சி ஹோசப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தர்ஷன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த ரசிகர்களில் சிலர், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் செல்லப்பெயரான “அப்பு”வை கூறி கத்திக்கொண்டுருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தர்ஷன் மீது காலணியை வீசினார். ஆனால் அவரோ எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு தர்ஷன் அளித்த பேட்டியில், "அதிர்ஷ்ட தேவி எப்போதும் கதவைத் தட்டுவதில்லை, அவள் தட்டும்போது, ​​அவளைப் பிடித்து, அவளை உங்கள் படுக்கையறைக்குள் இழுத்து, நிர்வாணமாக்கி விடுங்கள். அவளுக்கு நீங்கள் ஆடைகளைக் கொடுத்தால் வெளியே சென்று விடுவாள்” என ஆபாசமாகப் பேசியிருந்தார். இதுதான் காலணி தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் பிரபல நடிகர் கிச்சா சுதீப், தர்ஷன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் நான் பார்த்த வீடியோ மிகவும் கவலையாக உள்ளது. மேலும் அந்த இடத்தில் பலர் மற்றும் படத்தின் நடித்த முன்னணி பெண்களும் நின்று கொண்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தனர்.


அந்த நேரத்தில் ஆத்திரப்பட எதுவும் இல்லை. தர்ஷனைப் பொறுத்த வரையில், அவருக்கும் புனித் ரசிகர்களுக்கும் இடையே ஒரு இனிமையான சூழ்நிலை இருந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த எதிர்வினையை புனித் பாராட்டி ஆதரித்திருப்பாரா? இதற்கான பதில் ஒன்றுதான். அவருடைய அன்புக்குரிய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.






மேலும் தர்ஷன் மற்றும் புனித் ரசிகர்களை "அன்பையும் மரியாதையையும் பரப்ப வேண்டும்" என்றும் சுதீப் கேட்டுக் கொண்டார். இத்தகைய செயல்கள் கன்னடர்களை மோசமாக மட்டுமே பிரதிபலிக்கும். நான் தர்ஷன் மற்றும் புனித் இருவருடனும் நெருக்கமாக இருந்தவன் என்பதால் இந்த பதிவை வெளியிடுகிறேன். நான் பேச வேண்டியதை விட அதிகமாக பேசியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்றும் கிச்சா சுதீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.