தமிழ் திரையுலகில் 1980ம் ஆண்டுகளில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த சந்திப்பு அவர்களுக்குள் எவ்வளவு பிரபலமோ அதே அளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இது குறித்து நடிகை குஷ்பு சிலாகித்துப் பேசியுள்ளார்.
80s நடிகர்களாகிய நாங்கள் எங்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம். அதில் தான் எங்கள் பழைய நினைவுகள், அனுபவங்களைப் பகிர்ந்து வாழ்கிறோம். 80s வாட்ஸ் அப் குரூப் எங்களை இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் 100க்கணக்கான குறுந்தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். புகைப்படங்களைப் பகிர்கிறோம். இந்த குரூப்பில் சிரஞ்சீவி இல்லை. இருந்தாலும், நாங்கள் எல்லோரும் தொடர்பில் தான் இருக்கிறோம் என்று குஷ்பு கூறினார்.
அண்மையில் குஷ்பு நடிகர் சிரஞ்சீவியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். அதைப் பற்றி கூறியபோதே சிரஞ்சீவி இவ்வாறாகக் கூறியுள்ளார்.
குஷ்பு கடைசியாக ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்னும் அதிகமாக நிறைய படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
இது குறித்து, நான் நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் நினைக்கும் மாதிரியான கேரக்டர்கள் வருவதில்லை. அண்ணாத்தே படத்தில் நடித்தது ஓர் அற்புதமான உணர்வு. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி சாருடன் நடித்தேன். அவருடன் எப்போது நடித்தாலும் அது ஒரு படிப்பினை தான். அவர் வேலை செய்யும் அர்ப்பணிப்பில் கொஞ்சமும் மாறவில்லை. அவர் இன்று சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு சிறுவன் போல் உற்சாகமாக வருகிறார். அதுதான் அவரின் மாண்பு. அது தான் அவரை இவ்வளவு பெரிய ஆளாக மாற்றியுள்ளது.
நடிகை குஷ்பு 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்த அனுபவம் கொண்டவர். அது ஒரு அழகிய ரோலர் கோஸ்டர் அனுபவம் என்று கூறுகிறார். அந்தப் பயணம் மிகவும் இனிமையானது என்றும் நினைவுகூர்ந்தார். எனக்கு நல்ல இயக்குநர்கள் அமைந்தார்கள். எனக்கு அசாதரண திறமை கொண்ட நடிகர்கள் அமைந்தார்கள். இவை எல்லாம் எனது அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். என் சினிமா பயணத்தில் ஏற்றத்தாழ்வு இருந்துள்ளது. ஆனால் நான் என்றுமே தோல்விகளை நினைத்து வருந்தியதில்லை.
13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு. பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.