சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பாஜக சார்பில் நேற்று முன் தினம் அதாவது மார்ச் 11ஆம் தேதி போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததார். அப்போது, "தாய்மார்களுக்கு ரூபாய் ஆயிரம் பிச்சைப் போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு திமுகவின் அமைச்சர்களில் இருந்து பொதுமக்கள் வரை பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்புவின் சர்ச்சைகுரிய கருத்துக்கு மிகவும் காட்டமான கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “ யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. ஒருவர் மக்களுக்கு எதேனும் ஒரு உதவியைச் செய்கிறார்கள் என்றால் அது மக்களுக்கு கட்டாயம் பயனுள்ளது எனில் அதனை பாராட்டவேண்டும். உங்களால் அதனை பாராட்ட முடியவில்லை என்றால் தயவு செய்து அது குறித்து இழிவா பேசாதீங்க. 5 ரூபாய்க்கு ஒரு உதவி செய்தால் கூட அதனை பிச்சை எனக் கூறுவது எப்படி சரியாகும்?” என பதிவிட்டுள்ளார்.