Khushboo and Gayathri Raghuram: சேரி என்பது பிரெஞ்சு மொழியில் அன்பு என்ற புது விளக்கத்தை கொடுத்த குஷ்புவுக்கு ’ரேப்’ என்பது தெலுங்கில் நாளை என்ற விளக்கத்தை கொடுக்கும் என கிண்டலடித்து காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார்.
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியதற்கு நடிகை குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பல்வேறு விவாதங்கள் சென்று கொண்டிருந்தன. அதில் வலைதளவாசி ஒருவர் “மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது மகளிர் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு ”திமுக குண்டர்கள் இதைத்தான் செய்கிறார்கள். மோசமான மொழியை கையாள்கிறார்கள். உங்களை போல் சேரி மொழி பேச முடியாது. திமுக உங்களுக்கு சட்டத்தை கற்பிக்கவில்லை. உங்களை போன்ற முட்டாள் முதலமைச்சர் ஸ்டாலினை சுற்றியிருப்பது அவமானம். ஸ்டாலின் அவர்களே உங்களை சுற்றி இருக்கும் முட்டாள் கூட்டமே உங்களை அழித்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார். குஷ்பு சேரி மொழி என குறிப்பிட்டிருந்ததற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பேசும் மொழியை சேரி மொழி என இழிவுபடுத்தியுள்ளார் என்றும் அதன் மூலம் அம்மக்களையும் இழிவுபடுத்தியுள்ளார் என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதற்கு விளக்கம் அளித்த குஷ்பு “எனது ட்வீட்டை பார்த்து கொந்தளிக்கும் கூட்டத்தை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், ”இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன். என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன். இன்றுவரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "செரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
குஷ்புவின் டிவிட்டருக்கு கிண்டலடித்து காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ரேப் என்பதற்கு தெலுங்கில் நாளை என்று அர்த்தம். அதை தான் மன்சூர் அலிகான் சொன்னாரா? தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக விளையாடாதீர்கள்” என கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு டிரெண்டகி வருகிறது.