இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவரின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான் ஒரு சிறந்த பாடகி மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மான் இசை பள்ளியின் இயக்குனராவார். கடந்த ஆண்டு தான் கதிஜா - ரியாஸ்தீன் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
கதீஜா ரஹ்மான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தனது பயணம், கனவு, மெமரிஸ் என பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். கதீஜா முதலில் சினிமாவில் பாடிய பாடல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில். "புதிய மனிதா..." என இருவரிகள் மட்டுமே மூன்று மொழிகளிலும் பாடியிருந்தாலும் இன்றும் அனைவரின் நெஞ்சங்களில் பதிந்த வரிகள் என்றே சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டார் மடியில் வளர்ந்த ஒரு குழந்தை பின்னாளில் அவரின் திரைப்படத்திலேயே பாடியுள்ளார் என்பது குறித்த அவரின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.
13 வயதில் ரஜினி படத்தில் பாடிய அனுபவம் :
"ரஜினி சார் மீது என்றுமே எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவருடைய திரைப்படங்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும். அந்த சமயத்தில் எனக்கு 13, 14 வயது தான் இருக்கும். எனக்கு தெரியவே தெரியாது. தீரென ஒரு நாள் அப்பா என்னை பாட அழைத்தார். நான் எனக்கு எக்ஸாம் இருக்கிறது என்னால் வர முடியாது என்றேன். சரி நான் வேறு யாரையாவது அழைத்து பாட சொல்கிறேன் என்றேன். உடனே நான் இல்லை வேண்டாம் நானே வருகிறேன் என கூறிவிட்டு பிறகு பாடினேன். அந்த அனுபவம் மிகவும் அருமையானது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு சின்ன போர்ஷன்தான் பாடினேன் ஆனால் அதை இன்றும் மக்கள் பேசுகிறார்கள் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய போர்ஷனாக இருந்தாலும் சின்சியாரிட்டியுடன் பாடினால் நிச்சயமாக அது ரீச்சாகும் என்பதை நான் புரிந்து கொண்டேன். எத்தனை பெரிய போர்ஷன் படுகிறேன் என்பது முக்கியமில்லை.
கதீஜாவின் ஆல்பம் :
கதீஜாவின் 'குஹு குஹு...' ஆல்பம் டீசர் சமீபத்தில் வெளியானது. அது குறித்து கதீஜா கூறுகையில்" லதா மங்கேஷ்கர் தான் எனது மிக பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய சில செலக்டட் பாடல்களை தேர்வு செய்து அதன் ரீ - இமாஜினேஷன் வர்ஷன் உருவாக்கியுள்ளோம். இதற்காக 48 பெண்கள் அடங்கிய ஆர்க்கெஸ்ட்ரா வாசித்துள்ளார்கள். எங்களால் முழு உழைப்பையும் அதற்காக கொடுத்துள்ளோம். இது நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம்"என்றார் கதீஜா.