இசை உலகில் மாபெரும் பங்களிப்பை கடந்த 32 ஆண்டுகளாக வழங்கி வருபவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். இன்றும் அந்த கிரேஸ் குறையாமல் அடுத்தடுத்த படங்களில் கலைக்கான இசையை வழங்கி வருகிறார். இசை புயலாய் நெஞ்சங்களில் வீசிய ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவும் இப்போது இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.
மனோஜ் பரமஹம்சா தயாரிப்பில் ஹலிதா ஷமீமின் எழுதி இயக்கியுள்ள 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் கதீஜா ரஹ்மான். கடந்த எட்டு வருடங்களாக இப்படம் தயாரிப்பு பணிகளில் இருந்து வருகிறது அதற்கு காரணம் நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்டுவதற்காகத்தான் இந்த காத்திருப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் எஸ்தர் அனில், கௌரவ் காளை, பிரவின் கிஷோர் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் முன்பு வெளியான சில்லு கருப்பட்டி, பூவரசம் பீப்பி, ஏலே, லோனர்ஸ் உள்ளிட்ட படைப்புகள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளதால் அவரின் 'மின்மினி' படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
மின்மினி படம் வெளியான இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதை பார்த்த பலரும் படத்தை பாராட்டியள்ளனர். அதிலும் குறிப்பாக கதீஜாவின் பின்னணி இசை கவனத்தை ஈர்த்துள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக பாராட்டுகளை குவித்த முக்கியமான இசைமைப்பாளர்களின் பட்டியலில் கதீஜாவும் இணைந்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'ஸ்டார்' படத்தின் பின்னணி இசைக்காக யுவன் ஷங்கர் ராஜா பாராட்டுகளை குவித்தார். கடந்த ஜூலை 26ம் தேதி வெளியான தனுஷின் 50-வது படமான 'ராயன்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
அப்படத்தில் அவரே பாடிய ‘உசுரே நீதானே’ பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. பெரிய பாய் இசையமைத்த 'ராயன்' படத்தின் பின்னணி இசையும் பெரிய அளவில் பாராட்டுகளை குவித்து ஸ்கோர் செய்தது.
அந்த வரிசையில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் 'மின்மினி' படத்தின் பின்னணி இசைக்காக பாய் மகள் கதீஜா பாராட்டுகளை குவிக்க உள்ளார். இந்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த பின்னணி இசைக்காக யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் கதீஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.