யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரபல பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க மாட்டேன் என வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் யஷ். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார் யஷ்ஷின் விளம்பரப்பட ஒப்பந்தங்களை நிர்வகிக்கும் அர்ஜூன் பேனர்ஜி. ”சமீபத்தில் பல கோடி மதிப்புக்க பான் மசாலா விளம்பரப்பட வாய்ப்பை நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம். இந்தியா முழுவதும் யஷ்ஷின் பெயர் பிரபலமடைந்திருக்கிறது. இத்தருணத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள விரும்புகிறோம். யஷ் நடிக்க இருக்கும் விளம்பரப்படங்களை குறிப்பாக தேர்வு செய்ய இருக்கிறோம்.” என தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம், பிரபல பான் மசாலா பிராண்டின் விளம்பரப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஷாரூக்கான் ஆகியோர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பில், அக்ஷய் குமார் தான் பான் மசாலா பிராண்டு விளம்பரத்தில் இனி நடிக்க மாட்டேன் எனவும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது யஷ் பான் மசாலா பிராண்டு விளமப்ரத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
முன்னதாக, இந்தப்படம் தமிழில் அதிகம் வசூல் செய்த ‘2.ஓ’ படத்தின் வசூலை பீட் செய்தது. தமிழில் இதுவரை எந்தப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை. தெலுங்கில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூலிக்காததை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்