“பவர் ஃபுல் பீப்புள் மேக் ப்ளேசஸ் பவர் ஃபுல்” என்ற வார்த்தையை கே.ஜி.எஃப் என்ற ஒற்றைப் படம் மூலமாக நிஜமாக்கி காண்பித்திருக்கிறார் நடிகர் யஷ். கன்னட சினிமா என்றாலே ஏளனமும், எக்காளமுமாக பார்த்துக்கொண்டிருந்த திரையுலகினரின் முன்பு, கன்னட கலைஞர்களை காலரைத் தூக்கி விட்டு நடக்க வைத்திருக்கிறது கே.ஜி.எஃப். தெறிக்கும் ஆக்சன், மாஸ் டயலாக்ஸ், எகிடுதகிடு மியூசிக் எல்லாம், நீண்டநாட்களுக்கு பிறகு திரையரங்குகளை திருவிழா கோலம் காண வைத்திருக்கிறது.
ஒரு இடத்தை பிடிப்பது கடினம் என்றால், அந்த இடத்தை தக்க வைப்பது அதை விடக்கடினம் என்பார்கள். அப்படி தனக்கான இடத்தை தக்க வைக்க யஷ் கே.ஜி.எஃப் படத்தில் மட்டும் போராடவில்லை, தனது வாழ்கையின் ஒவ்வொரு படியிலும் போராடியிருக்கிறார். கே.ஜி.எஃப் பாகம் 1 இல் வருமே “அங்க ஏற்கனவே ஒருத்தன் தன்னோட காலடித்தடத்தை பதிச்சிட்டான்” என்ற வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ யஷ்ஷூக்கு மிகச் சரியாக பொருந்தும்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பூவனஹள்ளி பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநனரான அருண் குமார் என்பவருக்கும், புஷ்பா என்பவருக்கும் மகனாக பிறந்தவர்தான் நடிகர் நவீன் குமார். ஆம் நடிகர் யஷ்ஷின் உண்மையான பெயர் நவீன் குமார்தான். இவருக்கு நந்தினி என்ற தங்கையும் இருக்கிறார். சிறுவயது முதலே யஷ்ஷூக்கு நடிப்பு மீது தீரா தாகம். அதன் பலன், பள்ளி மேடை நாடகங்கள் எல்லாவற்றிலும் பங்கேற்றார். 10 வகுப்பு வந்த உடனே அப்பாவிடம் நான் நடிக்க வேண்டும், என்னை நடிப்புக் கல்லூரியில் சேர்த்து விடுங்கள் என்று கூற, தந்தையோ முதலில் பள்ளிப்படிப்பை முடி பின்னர் பார்க்கலாம் என்றிருக்கிறார். தந்தையின் வலுக்கட்டாயாத்தால், வேறு வழியில்லாமல் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்.
12 வகுப்பு முடித்த கையோடு அப்பாவிடம் இப்போது நடிக்க போகலாமா என்று கேட்டு நின்ற யஷ்ஷிற்கு நோ என்ற பதிலே வர, இனியும் பொறுக்க முடியாது என கையில் வெறும் 300 ரூபாயை வைத்துக்கொண்டு கனவைத்துரத்தி பெங்களூருக்கு வந்து விட்டார்.ஒரு வழியாக அடித்து பிடித்து போராடி ஒரு படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார் யஷ். ஆனால் அந்தப்படம் இரண்டே நாளில் ட்ராப். நொந்து போயி உட்கார்ந்திருந்த யஷ்ஷிற்கு அந்தப்படத்தில் அசோசியேட் இயக்குநராக வேலை பார்த்த மோகன் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்.
உதவி இயக்குநராக வேலை பார்த்த போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், சிறியதாக இருந்த மோகனின் வீடு உள்ளிட்டவை யஷ்ஷை பேசாமல் ஊருக்கே சென்றுவிடலாம் என நினைக்க வைத்தது. ஆனால் மீண்டும் ஊருக்கு சென்றால் மரியாதையாக இருக்காதே... என்று நினைத்தார் யஷ். அந்த ஈகோவே.. வேண்டாம், என்ன ஆனாலும் சரி ஜெயித்து விட்டுத்தான் ஊருக்கு போக வேண்டும் உறுதியை அவருக்கு தந்து விட்டது.
போராட்டத்தை தொடர்ந்தார். நண்பர்கள் சிலர் மூலம், ட்ராமா கம்பேனியில் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பின் அருமையை உணர்ந்த யஷ் கிடைத்த எல்லா வேலைகளையும் முன்வந்து செய்தார். கூடவே அவருக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைத்தது. அது அவர் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நடிப்பு.
ட்ராமாக்களில் யார் வரவில்லை என்றாலும் அதற்கு மாற்றாக அதில் யஷ்ஷே நடிக்கவைக்கப்பட்டார். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக கவனம் பெற்ற யஷ்ஷூக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட யஷ், மூன்று வருடங்களில் 5 சீரியல்களில் நடித்து முடித்தார். அத்தனையும் ஹிட். அந்த சமயத்தில் அவரைபோன்ற நடிகர்கள், காரில் வர, யஷ் மட்டும் பைக்கில் வருவாராம். காரணம் சீரியல் சம்பாதிக்கும் முக்கால் வாசிப்பணத்தை ஆடை வாங்குவதற்கே செலவிட்டு விடுவாராம். என்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் சினிமாதான் நமது இலக்கு என்பதை யஷ் ஒரு நாளும் மறக்க வில்லை.
தொடர்ந்து வாய்ப்புகளை தேடிய யஷ்ஷூக்கு 2007 இல் வெளியான ஜம்படா ஹுடுகி படத்தில் துணை நடிகர் கதாபாத்திரம் கிடைக்கிறது. மறுக்காமல் நடித்தார். படம் ஓரளவு வெற்றியை பெற, அடுத்தப்படத்தில் தனித்து தெரிய வேண்டும் என முடிவெடுக்கிறார். அவர் எதிர்பார்த்தது மாதிரியே ஒரு படம் அவரைத் தேடி வந்தது. அந்தப்படத்தின் பெயர், மோகின மனசு. படம் எகிடுதகிடு ஹிட்டானது.
முதல்படமே 100 நாள் ஓடியதால் அடுத்தடுத்து வரிசைக்கட்டி நின்றன வாய்ப்புகள். அடுத்ததாக ராக்கி என்ற படத்தில் கமிட் ஆகிறார். ஆனால் படம் அட்டர் ப்ளாப் ஆனது. கொஞ்சம் நிதானித்து கவனமாக கதைகளை கேட்க, ஆரம்பித்தார் யஷ். அதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான கல்லற சந்தே, கோகுலா சுமாராக ஓட, 2010 ஆம் ஆண்டு வெளியான மோடலசாலா படம் ஹிட்டடித்தது.
மார்க்கெட்டை தக்க வைக்க நிதானமாக காய் நகர்த்திய யஷ்ஷின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா படமும் வெளியானது. இதில் கிரட்டகா பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்த யஷ், நம்மூர் சுந்தரபாண்டியன் ரீமேக்கான ‘ராஜாஹூளி’ படத்தில் நடித்தார். இந்தப்படம் அவருக்கான ரசிகர்களை கனகச்சிதமாக அமைத்துக்கொடுத்தது.
அங்கு ஆரம்பித்த வெற்றிப்பயணம் இன்று வரை தொடர்கிறது. ஆம் அடுத்து வந்த 'கஜகேசரி', மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி', 'மாஸ்டர் பீஸ்', சந்து ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு', 'கே.ஜி.எஃப்', கே.ஜி.எஃப் 2 அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட்டுகள்..
கதாநாயகியான ராதிகா பண்டிட்டைத் யஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கர்நாடகா மாநிலம், கோப்பால் மாவட்டம் யெல்பர்கா உள்ள தள்ளூரில் இருந்த ஏரி வற்றிவிட, சுற்றி இருந்த 20 கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது. அப்போது களத்தில் இறங்கிய யஷ், 4 கோடி நிதி உதவி அளித்து, ஏரிதூர்வாற உதவினார். இதனால் ஏரி தண்ணீரால் நிரம்பியது. மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
அதே போல சென்னை பெருவெள்ளத்தின் போதும், நிவாரணப்பணிகளை அளித்து உதவினார் யஷ். இதை நடிகர் விக்ரம் ஒரு மேடையில் பெருமிதமாக பகிர்ந்திருந்தார். திரையிலும், நிஜத்திலும் மக்கள் மனதில் ஹீரோவாக நின்றிருக்கும் யஷ்ஷை கன்னடத்தில் ‘தல’ என்றே அழைக்கிறார்கள். 21 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய யஷ் இன்று அடைந்திருக்கும் உயரம் அசாத்தியமானது. ஏகப்பட்ட வலிகள், சோதனைகள், அவமானங்கள் என ஒவ்வொரு படியையும் தாண்டி வந்திருக்கும் யஷ்ஷிற்கு இந்த இடம் நிச்சயம் தகுதியான ஒன்றே.