பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் செய்துள்ள உதவி சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான உக்ரம் படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குநராக அறிமுகமான பிரஷாந்த் நீல் நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் படம் மூலம் உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுத்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இதனையடுத்து நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் அப்டேட் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதில் சலார் படமானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கவுள்ளதாகவும், இதற்கான படப்பிடிப்பை 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளேன் என்றும் பிரசாந்த் நீல் தெரிவித்தார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள நீலகண்டபுரம் தான் பிரசாந்த் நீலின் சொந்த ஊராகும். சில தினங்களுக்கு முன் இந்த கிராமத்திற்கு தனது தந்தையின் 75வது பிறந்தநாளை அவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கண் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.இந்த தகவலை பிரசாந்த் நீலின் பெரியப்பாவும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரகு வீரா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் நீலை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்