கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கேஜிஎப் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இது தொடர்பான விழாவில் அந்தப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






அப்போது பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், '' நாங்கள் கேஜிஎப் பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகிறது. சொல்ல முடிந்த அனைத்தையும் கதையாக சொல்லி இருக்கிறேன்.அனைவரும் படம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க இயலாது.கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றிபெற செய்து, கன்னட சினிமாவை இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பெற்று தந்ததற்கு அனைவருக்கும் நன்றி.


அவர்கள் இல்லாமல் சாத்தியமில்லை 


என்னுடன் சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் கே ஜி எஃப் படைப்பு உருவாக சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறுவேன். கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுபவர்களுக்கும் நன்றி.




கே ஜி எஃப் 2 படத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது. நாங்கள் தேர்ந்தெடுத்த நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்கள். அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். கேஜிஎப் 2 ஏப்ரல் 14 அன்று தேதியன்று வெளியாகும்போது, படத்தின் நாயகனான யஷ் ஏன் ராக் ஸ்டார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியவரும்.


யஷ் ஒரு நவீன செல்போன்


யஷ் அனைத்து அம்சங்களும் அடங்கிய நவீன செல்போன் போன்றவர். அவர் என்னை நன்றாக வளர்த்தார். எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பல இடங்களில் வசனம் கூட எழுதினார். அவரும் நன்றாக நடித்து, தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்தார்.  கடந்த எட்டு ஆண்டுகளில் கே ஜி எஃப் 2 படத்தின் அனைத்து நல்ல விஷயங்களையும் மறைந்த டாக்டர் புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எங்களின் பெருமை '' என்றார்.