கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.
ரசிகர்கள் காத்திருப்புக்கு பதில் கிடைக்கும் விதமாக இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான வருகிற ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக படக்குழு கேஜிஎப் - 2 திரைப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 6. 30 மணிக்கு வெளியிட்டது. தமிழில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா ட்ரைலர்..?
ஹாலிவுட் படங்களை போலவே தற்போது இந்தியா முழுவதும் படங்கள் பார்ட் 1, பார்ட் 2 என வெளியாகி வருகிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட படங்கள் முதல் பார்டை போலவே வெற்றிபெறும் என்றால் இல்லை என்றே வார்த்தை முதலில் தோன்றும். ஒரு குறிப்பிட்ட இரண்டாம் பாகம் படங்களே அரிதாக பெரியளவில் வெற்றி பெறும். அந்த படங்களையும் விரல் விட்டே எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நிலையில் பாகுபலிக்கு பிறகு இந்தியா முழுவதும் இரண்டாம் பாகத்திற்கு காத்திருந்த திரைப்படம்தான் இந்த கேஜிஎப் - 2
அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி யூடியூப்பில் அதிக லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அதேபோல், ட்விட்டரிலும் கேஜிஎப் - 2 ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின்படி, கேஜிஎப் இரண்டாம் பாகம் ரசிகர்களை பூர்த்தி செய்தது என்றே கூறலாம்.
மாஸ் காட்டும் ட்ரைலர் :
கடந்த கேஜிஎப் முதலாம் பாகத்தின் தமிழ் ட்ரைலரின் பெரிய ப்ளஸ் நிழல்கள் ரவியின் குரல்தான். அது இந்த இரண்டாம் பாகத்தின் ட்ரைலரில் எங்கே என்ற கேள்விதான் முதலில் வருகிறது. பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுவது அது ஒன்றையே. பவர் புல் பீப்பிள் கம்மிங் பிரம் பவர் புல் ப்ளேஸ் இல்லாததுதான் ட்ரைலரின் முதல் மைனஸ்.
அந்த குறை கண்டுபிடிக்கும் முன்பே, அதை நிவர்த்தி செய்யும் விதமாக மாற்றொரு ஜாம்பவான் பிரகாஷ் ராஜ் குரலில் "ரத்தத்தில் எழுதுன கதை இது" என்று கணீர் என்று ஒலிக்கிறது. தொடக்கமே வடிவேல் பாணியில் இது ரத்த பூமி என்று சொல்லாமல் சொல்லி மேலும் ட்ரைலரை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது.
கடந்த கேஜிஎப் படத்தில் ஒரு சில காட்சிகளில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவம் வந்து போகும். ஆனால், இந்த ட்ரைலரில் அது பெரும் சர்ச்சையை கிளப்பலாம் என்று எண்ணி படத்தில் கம்பீர பெண் உருவத்தில் வேறு ஒரு பெண்ணை படக்குழு களமிறக்கியுள்ளது. ஒருவேளை அது இந்திராகாந்தி கதாபாத்திரம் எங்கே என்ற கேள்வி கேட்க தோன்றுகிறது.
வழக்கம்போலவே, கேஜிஎப் படத்தில் வசனங்கள் ட்ரைலரை தெறிக்கவிடுகிறது. இந்த காட்சிகள் நிச்சயம் தியேட்டரில் விசில் பறப்பது நிச்சயம். அதேபோல், ட்ரைலரின் 1.20 காட்சிகளுக்கு பிறகு யஷ் வரும் காட்சிகள் ரசிகர்களின் மனதை குதுகளமாக்கிறது.
முதல் காட்சியிலேயே யஷ், எனக்கு வன்முறை அறவே பிடிக்காது என்று கூறி, அடுத்த நொடியே 'ஆனா அந்த வன்முறைக்கு என்ன பிடிச்சுருக்கு என்று பட்டையகிளப்பும் வசனங்கள் உடலை புல்லரிக்க செய்கிறது. காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ட்ரைலரில் வழக்கம்போல அவ்வபோது அம்மா சென்டிமென்ட், ஒரு சில காட்சிகளில் ஹீரோயின் என்று வந்துபோக, தொடக்கம் முதலே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் காட்சிகளும் வேற லெவலில் இடம்பெற்றுள்ளனர்.
இறுதியாக, கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இல்லையா என்று பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்