ஏப்ரல் 14-ந் தேதி வெளியான கே.ஜி.எப். பார்ட் 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூலையும் முறியடித்து உலகெங்கும் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிருங்கடே தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், ஹோம்பலே பிலிம்சின் அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஹோம்பலே பிலிம்சின் அடுத்த படத்திற்கான இயக்குனராக சுதா கொங்கரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா தமிழில் துரோகி என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின்னர், கடந்த 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால், சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இந்த நிலையில், ஹோம்பலே பிலிம்சின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா தற்போது மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படம் நிறைவடைந்த பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்