கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அமீர்கானின் தங்கல் திரைப்படத்தின் வசூலை மிஞ்சியுள்ளது. இதன்மூலம் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்தியில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் 2  ஆவது இடத்தை பிடித்துள்ளது.

  


முன்னதாக அமீர்கான் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படமான தங்கல் திரைப்படம் 387.28 கோடி ரூபாய் வசூலித்து இந்தியில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது. இந்த சாதனையை ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் 510 கோடி ரூபாய் வசூலித்து முறியடித்தது. இந்த நிலையில் தற்போது கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 391 கோடி வசூலித்து இந்தியில் அதிகம் வசூல் செய்த இராண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது.   






யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2.  இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம் அண்மையில் 1000 கோடியை கடந்தது. முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தப்படத்தின் 3 ஆம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் நடிகர் யஷ்ஷூடன் நடிகர் பிரபாஸ் சில காட்சிகளில் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்தப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும்  ‘சலார்’ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.