விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை


மலையாள இயக்குநர் உபைனி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ‘ரஹேல் மக்கன் கோரா’ என்கிற படம் வெளியானது. தன்னுடைய படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்கள் செய்து தன்னிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இயக்குநர் உபைன் கேரள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரபல யூடியூப் மற்றும் இன்ஸா பயன்பாட்டாளர் உள்ளடக்கிய மூன்று பேர்களின் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.


விமர்சகர்களுக்கு எதிரான வழக்குப் பதிவு


இதனைத் தொடர்ந்து கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சமூக வலைதளங்களில் விமர்சனம் என்கிற பெயரில் திரைப்படங்களை மட்டம் தட்டுவது, தகாத சொற்களை பயன்படுத்தி விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த விவகாரத்தில் முன்னதாக கேரள உயர் நீதிமன்றம் சமூக வலைதளங்களில் செய்தி நிறுவனங்கள் அல்லது பத்திரிகைத் துறையின் அங்கீகாரம் பெறாது விமர்சகர்களை கண்காணிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. 


எது விமர்சனம்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் “ஒரு விமர்சனம் என்பது மக்கள் ஒரு படத்தை புரிந்துகொள்வதற்காகவே தவிர ஒரு படத்தின் கருவை சிதைப்பதற்காகவோ அல்லது மிரட்டி பணம் பறிப்பதற்காக இல்லை”  என்று கூறியுள்ளார். " கட்டுபாடுகளற்ற கருத்து சுதந்திரத்தை காரணம் காட்டி ஒரு படத்தில் இருக்கும் தனி நபர்களின் உழைப்பை தியாகம் செய்ய முடியாது.’


அதிலும் குறிப்பாக எந்தவித நிர்வாகத்தின் கீழும் இயங்காமல், விமர்சகர்கள் என்று பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாமல் ஒரு சில தனிநபர்கள் விமர்சனம் என்கிற பெயரில் தனி நபர்களின் உழைப்பை கொச்சைப்படுத்துவது நியாயமானது கிடையாது” என்று அவர் கூறியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பில் இருக்கும் விமர்சகர்கள்


இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் விமர்சனங்களை கேரள காவல் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக வரும் வழக்குகளை முடிந்த அளவுக்கு விரைவாக விசாரணையை மேற்கொள்கிறது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் காவல் துறை ஆவணங்களை சமர்பித்தது.


முடிவு சரியானதா


சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் விமர்சகர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது. இதில் பெரும்பாலான  நபர்கள் விமர்சகர்கள் என்கிற பெயரில் தகாத வார்த்தைகளால் எந்தவித எதார்த்த நிலவரமும் தெரியாமல் திரைப்படங்களை விமர்சித்து வருகிறார்கள்.


ஒரு பக்கம் தேர்ந்த சினிமா விமர்சனங்கள் வந்துகொண்டிருக்க மறுபக்கம் இந்த தனிநபர்களின் விமர்சனங்கள் மக்களிடம் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றன. அதே நேரத்தில் இந்த விமர்சனங்கள் தனிப்பட்ட காழ்ப்புகள் நிறந்ததாகவும் இருப்பதால் கேரள உயர்நீதி மன்றத்தின் இந்த போக்கு மக்களால் வரவேற்கப் படுகிறது.