‘சூரரைப்போற்று’ திரைப்படத்துக்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது பிஜூ மேனன், வினீத் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து 'தங்கம்' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.


இந்தப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சட்டக்கல்லூரி நிகழ்வு ஒன்றில் படக்குழுவினருடன் முன்னதாக அபர்ணா பாலமுரளி கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் அபர்ணாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்காக மேடைக்குச் சென்ற மாணவர் ஒருவர் வரம்பு மீறி அபர்ணாவின் தோல் மீது கைபோட்டு போட்டோ எடுக்க முயற்சித்து அபர்ணாவையும் அங்கிருந்தோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 


பொதுவெளியில் அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் மிக மோசமாக நடந்து கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாக பகிரப்பட்டு கடும் கண்டனங்களைப் பெற்று வந்தது.






இந்நிலையில், முன்னதாக மேடையில் தகாத முறையில் செயல்பட்ட அந்த மாணவர் பின்னர் அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் அப்படி செய்ததற்கான விளக்கத்தையும் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. மேடைக்குச் சென்று அபர்ணாவிடம் விளக்கம் தெரிவித்து மீண்டும் மாணவர் கைக்குலுக்க முயற்சித்தது, அபர்ணா அதற்கு  மறுப்பு தெரிவித்தது உள்ளிட்ட காட்சிகளும் இணையத்தில் ட்ரெண்டானது.


இருப்பினும் மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் முதல் படக்குழுவினர் வரை மாணவரின் இச்செயலை கண்டிக்காமல் கடந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்துக்கும், அங்கிருந்து படக்குழுவினருக்கும்  நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.


முன்னதாக எர்ணாகுளம் சட்டக் கல்லூரி யூனியன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் அபர்ணாவிடம் மாணவர் நடந்து கொண்டது குறித்து மன்னிப்பு கோரியிருந்தது.  


இந்நிலையில், அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவரை ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விஷ்ணு  எனும் இந்த மாணவர் தன் மோசமான நடத்தக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்துக்கு முன்னதாக விளக்கம் அளித்த நிலையில், இதனை ஏற்றுக்கொள்ளாத சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் மாணவர் விஷ்ணுவை ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.