தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அறிமுகமான காலக்கட்டத்தில் நடிக்கவே தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் கீர்த்தி. ஆனால் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு இவர் மீதான பிம்பம் அடியோடு மாறிவிட்டது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மற்ற பிரபலங்களை போலவே சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் கீர்த்தி தனது புதிய பிசினஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுட்டுள்ளார். முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ” நான் தேர்வு செய்யும் எல்லா காதாபாத்திரங்களும் என்னுள் ஒரு அங்கம்தான். நான் பயன்படுத்தும் பொருட்களும் இயற்கைக்கு முரணானதாக இருக்காது. முடிந்த வரையில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் நடந்துக்கொள்கிறேன் என்று நம்புகிறேன். அப்படி முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விஷயங்களோட கூடிய அறிவிப்போடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
யாரோ ஒருவருடைய பிராண்டுக்கான புரமோஷன் வேலைகளைதான் செய்து வருகிறார் என்று பார்த்தால், அது அவரது சொந்த பிசினஸ். தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து ‘பூமித்ரா’ என்னும் இயற்கை அழகு பொருட்கள் வணிகத்தை தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் “ இது முற்றிலும் இயற்கை பொருட்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரசாயனம் இல்லாத செயற்கை நிறம் அல்லாத பொருட்கள் ”என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக தனது குழுவுடன் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்தாராம். ஒரு வேளை இந்த பொருட்கள்தான் கீர்த்தியின் அழகு ரகசியமாக இருக்குமோ.
கீர்த்தி சுரேஷ் தற்போது செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தை நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஆரண்யகாணடம் என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. அதில் கீர்த்தி மற்றும் செல்வராகவன் இருவரும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதால் , படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நி்லையில் டப்பிங் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ,தற்போது இல்லை என்பதால், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் எண்ணத்தில் உள்ளார்களாம் படக்குழு.
இதற்காக அமேசான் பிரைமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டத்தில் இருக்கும் சாணிக்காயிதம் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் வெளியீட்டு விவரங்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.