கீர்த்தி சுரேஷ்


2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.


சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொடர்ச்சியாக ரஜினிகாந்த், விஜய், என் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின்  நடிகையர் திலகம் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட ‘மகாநடி’ படத்தில் நடித்திருந்தார்.


நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது.


வழக்கமான கமர்ஷியல் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து பென்குயின் , சாணி காயிதம் போன்ற எக்ஸ்பெரிமெண்டலான படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய படத்திற்கு ரகு தாத்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ஸை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.


ரகு தாத்தா


ஹாம்பேல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சுமன் கும் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் சிறிய க்ளிம்ஸ் வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் “ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க சிரிக்கவைக்க வருகிறது, ரகு தாத்தா (Raghu Thatha). விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்…” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.