'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். சமீபத்தில் இவர் இயக்கி முடித்திருக்கும் படம் 'சாணிக்காயிதம்'. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளதால் சாணிக்காயிதம் படத்திற்கு ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செல்வராகவனுக்கு இணையாக இப்படத்தை எதிர்பார்க்க வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் வெளியான ட்ரைலரிலும் கவனிக்க வைத்தார் கீர்த்தி. அழகு பதுமையாகவே இதுவரை பார்த்திருந்த கீர்த்தியை ரத்தம் தெறிக்க தெறிக்க நடிக்க வைத்திருக்கிறார் அருண். 






இந்நிலையில் சாணிக்காயிதம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில், ''இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் இனிமையான, வசீகரமான கதாபாத்திரங்கள். ஆனால் சாணிக்காயிதத்தின் பொன்னி, முரட்டுத்தனமான கதாபாத்திரம். பொன்னியாக உடையை அணிந்துகொண்டு, மேக்கம் போட்டுக்கொண்டு செல்வராகவன் மற்றும் அருண் எதிரே சென்று நின்றேன். நான் தயார் என்றேன். இப்படியான ஒரு ரத்தம் தெறிக்கும் படத்தில் என்னை நினைத்துக் கூட பார்த்ததில்லை. இது மிகவும் கடினமாக இருக்குமென்றே நினைத்தேன். ஆனால் கதையும், படப்பிடிப்புத்தளமும் என்னை கடினமாக உணரவைக்கவில்லை. பொன்னியாக நடிப்பது எனக்கு எளிதாகவிட்டது’’என்றார்.






சாணிக்காயிதம் திரைப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில்  இப்படம் வெளியாகவுள்ளது.


முன்னதாக, கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 80களில் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்டது இப்படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சாணிக்காயிதம் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. கொலை குறித்து போலீசார் விசாரிப்பதும், செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் கொலை குறித்து பேசுவதுமாக ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ட்ரெய்லராக இருந்தது சாணிக்காயிதம்.