லக்‌ஷ்மண் உடேகர்  இயக்கத்தில் கிருதி சனோன் மற்றும் பங்கஜ் திருபாதி நடிப்பில் வெளியான திரைப்படம் மிமி. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வாடகை தாயாக மாறும் இளம் பெண் சந்திக்கும் பிரச்சனையை ஒன்லைனாக வைத்து இந்த படத்தை  சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாக்கியிருந்தார் இயக்குநர்.  படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். அதுதான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. மராத்தி மொழியில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'mala aai vhhaychy’ என்கிற படத்தின் ரீமேக்தான் மிமி.


 'mala aai vhhaychy திரைப்படம் தேசிய விருதும் பெற்றது. இந்நிலையில் இந்தியில் வெளியான மிமி திரைப்படத்தை  தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் நடிக்க , நடிகை கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர் படக்குழு. 






சமீப காலமாக உச்ச நடிகைகள் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளதால். மிமி படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் அறிமுகமான காலக்கட்டத்தில் நடிக்கவே தெரியவில்லை என்ற கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.  ஆனால் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு இவர் மீதான பிம்பம் அடியோடு மாறிவிட்டது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 






கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மற்ற பிரபலங்களை போலவே சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் . சமீபத்தில் கீர்த்தி  தனது புதிய பிசினஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ”நான் தேர்வு செய்யும் எல்லா கதாபாத்திரங்களும் என்னுள் ஒரு அங்கம்தான். நான் பயன்படுத்தும் பொருட்களும் இயற்கைக்கு முரணானதாக இருக்காது. முடிந்த வரையில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் நடந்துகொள்கிறேன் என்று நம்புகிறேன். அப்படி முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விஷயங்களோட கூடிய அறிவிப்போடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.


ஏதோ ஒரு பிராண்டை புரமோட் செய்கிறார் என பார்த்தால் சொந்த பிசினஸை தொடங்கிவிட்டார். பூமித்ரா என்னும் ஆர்கானிக் அழகு பொருட்கள் விற்பனையை  தனது நண்பர்களுடன் இணைந்து கீர்த்தி தொடங்கியுள்ளார். கீர்த்தியின் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.