தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தாலும், தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகிறார்.


இறுதியாக நடிகர் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த தசரா படம் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்தது. அப்படத்தின் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மைனரு வேட்டி கட்டி’ பாடல் வரவேற்பைப் பெற்று இன்ஸ்டா ரீல்களை ஆக்கிரமித்தன. ஆனாலும் வெண்ணிலா கதாபாத்திரத்தில் கீர்த்தி பொருந்தவில்லை என்றும் ட்ரோல்கள் கிளம்பின.


அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் நடித்துள்ள மாமன்னன் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழில் தான் கீர்த்தி பெருமளவு கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், சென்ற ஆண்டு தான் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடந்ததைக் நினைவுகூர்ந்து கீர்த்தி பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி கலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு திரையரங்குகளில் கட் அவுட் வைத்து தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர்.


இந்தப் படம் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்து சென்ற ஆண்டின் மாபெரும் டோலிவுட் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்நிலையில், கீர்த்தி தற்போது தன்னுடைய கலாவதி கதாபாத்திரத்தை நினைவுகூர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாவில் கீர்த்தி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேல் இதயங்களைப் பெற்று லைக்ஸ் வேட்டை நடத்தி வருகின்றன.


 






கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். முன்னதாக மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது. வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றிருந்தனர். 


நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், ஏற்கெனவே இதுதான் சினிமாவில் தன் கடைசி படம் என அறிவித்துவிட்டார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.