நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாக உள்ளது. குறிப்பிட்ட சாதியினரைப் பற்றி மிக மோசமான கருத்துகள், சாதிய பாகுபாடை ஊக்குவிக்கும் கருத்துகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக ட்ரெய்லர் வெளியானது முதல் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இப்படத்தின் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில்,  கோயம்புத்தூர், கோனியம்மன் கோயிலில் நடிகர் மற்றும் கவுண்டம்பாளையம் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:


‘சமூகநீதிங்கறதே தவறு’


“சமூக நீதி பத்தி யாராவது பேசுனா எனக்கு கடும் கோபம் வரும். பெத்த அம்மா - அப்பா கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிவிட்டா, கிளி மாதிரி பாத்து பாத்து வளர்த்த பிள்ளையை கண்டவன் தூக்கிட்டுப்போறதுதான் காதலா.. இதுதான் புரட்சிக் காதலா? இதுதான் சமூக நீதி காதலா?


சமூக நீதிங்கறது என்னது? முதலில் சமூக நீதிங்கறதே தவறு.. ஒரு செல்ஃபோன் காணாமல் போனால் புகார் தருகிறீர்கள்.. கார் காணாமல் போனால் புகார் தருகிறீர்கள்.. அந்த வழக்கையெல்லாம் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் பெத்தவங்க கஷ்டப்பட்டு வளர்க்கும் பிள்ளையை ஒருத்தன் தூக்கிட்டுப் போறான். அதுக்கு யார் பாதுகாப்பு? நீங்கள் 4 பேர் போய் கையெழுத்து போட்டால் அந்தப் பிள்ளைக்கு கல்யாணம் ஆகிவிடுமா? அப்போ பெத்தவங்க நிலை, வலி, கண்ணீர் என்ன? சமூக நீதி என ஏமாற்றும் சமூக நீதிப் போராளிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு சுய மரியாதைத் திருமணத்தை முதலில் செய்துவைச்சிட்டு அடுத்தவங்களுக்கு அப்பறம் கல்யாணம் செய்துவைத்தா சிறப்பு. அடுத்தவங்க குடும்பத்தின் கஷ்டம் இவர்களுக்குத் தெரியாது. 


‘ரிஜிஸ்டர் ஆஃபிஸில் சட்டம் கொண்டு வாங்க’


சாதிய, மதப் பிரிவினையை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதெல்லாம் நடக்கிறது. தயவு செய்து பெத்தவங்க கையெழுத்து இல்லாமல் திருமணம் நடக்கக்கூடாது என ரிஜிஸ்டர் ஆஃபிஸில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டுவந்துவிட்டால் இதுபோன்ற நாடகக்காதல் எங்கும் நடக்காது, ஆணவக் கொலை நடக்காது, அடிதடி , கலாட்டா நடக்காது, சமூகப் பிரச்னையும் நடக்காது.


இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சாதி இவர்களுக்கு தேவைப்படுகிறது. பிறகு என்ன சமூக நீதிப் பிரச்னை பற்றி பேசுகிறார்கள்? உலகத்தின் பெத்தவங்க தான் பெரிய சாதி. சமூக நீதி பெத்தவங்களுக்கும் சேரும். ஒரு புள்ளைய கூட்டிட்டுப்போய் கடத்தி வைக்கிறீர்கள். அவர்கள் பெத்தவங்களிடம் பேசி நீங்கள் கல்யாணம் செய்துவைக்கலாமே.. இது பற்றி விழிப்புணர்வு வர வேண்டும். அதற்கு நாளைய சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக தான் நான் கவுண்டம்பாளையம் போன்ற படம் எடுத்துள்ளேன். உங்களுக்கெல்லாம் பிடிக்கும்” என்றார்.


‘நாடகக்காதல எதிர்ப்பதால் சாதி வெறியனா..’


தொடர்ந்து “காதல் திருமணத்தை எதிர்க்கிறீர்கள். சாதிப் பெயர் கொண்ட பெயரை வைத்துள்ளீர்கள், அப்படி என்றால் சாதிய ஆதிக்கத்தை ரஞ்சித் ஊக்குவிக்கிறாரா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதில் அளித்த ரஞ்சித், “நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.  இந்தப் படத்துக்கு கவுண்டம்பாளையம் என்று பெயர் வைத்தது தான் பிரச்னை. கவுண்டம்பாளையம் என்பது சாதிப் பெயர் இல்லை. இங்க ஒரு 100 ஊர் உள்ளது. அது ஒரு சட்டப்பேரவைத் தொகுதி. கொங்கு பகுதியில் வாழ்பவர்களுக்குத் தெரியும், நாடகக்காதல் என்று நான் சொல்லும்போது மட்டும் என்னை சாதி வெறியனாகப் பார்க்கறீங்க. இந்த நாடகக்காதல் ஒரு சாதிக்கு மட்டும் நடப்பதில்லை. எல்லா சாதியினருக்கும் நடக்கிறது. பெத்தவங்கள எதிர்த்து, அவங்களுக்கு தெரியாம தூக்கிட்டுப் போறததான் நாடகக்காதல்னு சொல்றேன். நாடகக்காதல எதிர்ப்பதால் என்னை சாதி வெறியன்னு சொல்றீங்கனா, கையெடுத்து கும்பிடறேன், ஆமா நான் சாதிவெறியன் தான். சொல்லிக்கோங்க” எனப் பேசியுள்ளார்.