தமிழ் சினிமாவின் மிக முக்கிய பாடலாசிரியரான வைரமுத்து நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வைரமுத்து தமிழ் மொழி குறித்தும்,கலாசாரம் குறித்தும் பேசினார். மொழி தெரியாத வட மொழி பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு சில நேரம் காலாசாரத்தையே சிதைக்கும் வகையில் போய்விடுவதாக தெரிவித்தார். இதற்காக அவர் ஒரு எடுத்துக்காட்டையும் தெரிவித்தார். 


தேவா இசைக்காக பாடல் ஒன்றை எழுதினேன். அதில் 'பிரியமான பெண்ணை ரசிக்கலாம்' என எழுதி இருந்தேன். வடநாட்டு பாடகாரான உதித் நாராயணன் அந்த வரியை பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம் என பாடினார். நான் அறையின் கதவைத் தட்டி தவறை சுட்டிக்காட்டி மாற்றினேன். பாடகர் உதித் நாராயணன் மனதளவில் கள்ளம்கபடம் இல்லாத பாடகர்.பாவம், அவருக்கு மொழி தெரியாததால் இந்த தவறு நடந்துவிட்டது என்றார்.




வைரமுத்து குறிப்பிட்ட சொன்ன அந்த பாடல் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்' திரைப்படத்தில் வரும் 'ஈஸ்வரா..வானும் மண்ணும்..' எனத் தொடங்கும் பாடலாகும். வைரமுத்து சுட்டிக்காட்டியதும் அந்த வரி திருத்தப்பட்டு தற்போது பாடலில் சரியாக பாடப்பட்டிருக்கும்.






சமீபத்தில் வைரமுத்துவின் மற்றுமொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது. மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும் என்றார்.மேலும் பேசிய அவர், நான் ஆச்சர்யமான மனிதனாகப் பார்க்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். நான் தோய்வு, ஓய்வு இல்லாமல் இன்னும் இன்னும் வீரியத்துடன் இயங்க என்னக் காரணம் எனக் கேட்கிறீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது தமிழ். 


உண்மையில் நான் ஒரு வெறும் கம்பி. அந்தக் கம்பிக்குள் தமிழ் என்ற மின்சாரம் செல்கிறது. தமிழ் வீரியமானது. அதனால், சில லட்சம் கிலோவாட் மின்சாரம் பாய்கிறது. அதனால் நான் வீரியமாக இருக்கிறேன். மேலும், நான் நானாக இருக்கிறேன். நான் உழைக்கிறேன். அதனால் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன். இந்தத் தமிழ் என்பது சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் தொடர்ச்சியானது. நான் தமிழை சுவாசிக்கிறேன். அதனால் வாழ்கிறேன். என்றார்.