மொழிகளிலே மூத்த மொழியான தமிழ் மொழிக்கு கடவுள் கொடுத்து வியக்கத்தக்க கொடை தான் ஈடு இணையில்லா கவியரசு கண்ணதாசன். இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நமது நெஞ்சங்களை விட்டும் செவியை விட்டும் நீங்காத வரிகளைத் தந்து தனியிடத்தில் குடிகொண்டு இருப்பார் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல.
தனது வரிகளால் நம்மை ஆட்கொண்ட அந்தப் பிறவி கலைஞருக்கு ஈடு இணையாக இந்த உலகில் இதுவரையில் யாரும் பிறக்கவில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது அவரின் தனி பெருமை. இந்தத் தலைமுறை கவிஞனின் 42வது நினைவு தினம் இன்று...
சென்னை வருகை:
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இந்த மண்ணின் மைந்தன் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து இருந்தாலும், தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என தன்னுடைய ஆசைக்காக வீட்டை விட்டு 16 வயதில் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
முதல் திரைப்பாடல் :
தான் விரும்பியபடியே பத்திரிகைகளுக்கு கவிதை, நாடகம், சிறுகதைகள், நாவல்கள் எழுதி வந்தவருக்கு சினிமா பாடல்களுக்கு வரிகள் எழுத வேண்டும் என ஆசை வந்தது. அப்படி அவரின் அந்த தாகத்தை தீர்த்தவர் தான் இயக்குநர் கே. ராம்நாத். ஜூபிடர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'கள்வனின் காதலி' திரைப்படத்தில் ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடலின் வரிகள் தான் கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்பாடல்.
கொடி கட்டி பறந்தார் :
அன்று திரைத்துறையில் தொடங்கிய அவரது பயணம் தொடர்ந்து 30 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக பயணித்தது. அவரின் பாடல்கள் வரிகளுக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டது. அவரின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பதை பாடுவதை மிக பெரிய பாக்கியமாக கருதினார்கள்.
அந்தக் காலகட்டத்தில் உச்சம் தொட்ட நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என ஏராளமான நடிகர்களுக்கு கண்ணதாசன் எழுதிய எண்ணற்ற பாடல்கள் இன்று வரை ஒலித்து கொண்டு இருக்கின்றன. பாடலாசிரியர் மட்டுமின்றி கதை, வசனம், தயாரிப்பு என அனைத்திலும் இறங்கி அடித்தார். கொடிகட்டி பறந்த கண்ணதாசனுக்கு சேமித்து வைக்கும் பழக்கமில்லை. அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
அனுபவக் கவிஞன் :
கண்ணதாசனின் வரிகள் துயரத்தில் இருக்கும் போது ஆறுதலாகவும் தாலாட்டாகவும், மனம் நொந்தவனுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியதோடு காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான கவிதைகள் நாவல்களையும் எழுதியுள்ளார்.
அவரின் பாடல்கள் பெரும்பாலும் அனுபவத்தால் எழுதப்பட்டவை என்பதால் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடலின் வரிகளை புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை. அதனால் அவரின் வரிகள் காலம் கடந்தும் உணர்வுகளால் தலைமுறைகளை கடந்து மேலோங்கி நிற்கிறது.
அரசியல் வாழ்க்கை :
பன்மொழி புலவராக இருந்த கண்ணதாசனுக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்ததால் அதிலும் களம் இறங்கிப் பார்த்தார். ஆனால் அவரின் வெளிப்படையான பேச்சு, நேர்மை, அஞ்சாத விமர்சனங்கள் இவை எதுவும் அரசியலுக்கு சரிபடாததால் அதில் இருந்து விலகினார். கண்ணதாசள் மறைந்து 42 ஆண்டுகள் கடந்தும், அவரது படைப்புகள் இன்றும் நமக்கு மத்தியில் இந்தத் தலைமுறையினரைக் கடந்த படைப்புகளாக வாழ்ந்து நம்மை ஆற்றுப்படுத்தவும் உத்வேகம் அளிக்கவும் செய்கின்றன. அவரை நினைவுகூர்வோம்!