விஜய் டிவியில் ஒளிபரப்பான எவர்க்ரீன் தொடரான 'கனா காணும் காலங்கள்' மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின் பப்ளிசிட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பன்மடங்காக எகிறியது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிய துவங்கின.
லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வெற்றி அடைந்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் நடிகர் கவின் நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் நடிகர் கவின் ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் கவின். முதல்முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இப்படம் மூலம் ஜோடி சேர்கிறார் நடிகர் கவின் என்பது குறிப்பித்தக்கது.
கவினை விடவும் வயதில் மூத்த நடிகையான நயன்தாராவுடன் ஜோடி சேர்வது குறித்து சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் படத்தின் கதைக்களமே ஹீரோ தன்னை விட வயதில் மூத்த ஹீரோயினை விரும்புவது தான் என கூறப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா அதே காரணத்துக்காக தான் இப்படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் - நயன்தாரா ஜோடி சேரும் இப்படத்தின் டைட்டில், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ள போட்டோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருவதுடன் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.