சமரசத்தை நாடாத ஒரு சாமானியன் - ராம்
இன்று இயக்குநர் ராமின் பிறந்தநாள். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி , பேரன்பு என நான்கு படங்களை இயக்கியுள்ளார் ராம். இந்த நான்கு படங்களும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஈர்க்கின்றது. ஒரு குறிப்பிட்ட சாரார் இந்தப் படங்களில் உள்ள பிரச்சனைகளை பேசுகிறார்கள். இருதரப்பிலும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் ராமிடம் இருக்கும் ஒரு தனித்துவம் என்றால் இந்த இரு தரப்பு மக்களாலும் தொடர்ந்து அங்கீரகரிக்கப் படக்கூடிய ஒருவராகவும் இவர்களால் அதிக விவாதிக்கப் படக்கூடிய ஒரு ஆளுமையாகவும் அவர் இருக்கிறார் என்பதே நிதர்சனம்.
ஒரு படைப்பாளி ஒரு சமூகத்தில் இருக்கும் பலதரப்பட்ட ரசனைகளைக் கொண்ட மக்கள் தரப்பினரால் பேசப்படுகிறார் என்றால் அந்த படைப்பாளி அந்த சமூகத்தின் கட்டமைப்பை ஏதோ ஒரு வகையில் அசைத்து பார்க்கிறார் என்பதை இதற்கு அர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
கலையில் விடுதலை
சினிமாவை மிகத் தீவிரமாக ஒரு கலை வடிவமாக பின்பற்றுபவர்கள் அனைவரும் மக்களிடம் போய் சேருவதில்லை. ஏதோ ஒரு வகையில் தங்கள் மதிக்கும் ஒரு விஷயத்தை அனைவருக்குமான ஒரு படைப்பாக சிலர் தவறிவிடுகிறார்கள். ஆனால் எந்த ஒரு கலாச்சாரத்திலும் அந்த அந்த காலத்திலும் அது பொருட்களாகட்டும் கலையாகட்டும் அதில் மலிவானவையே மக்களிடம் எளிதில் போய் சேருகின்றன. சினிமா ஒரு பொருள் என்றால் அந்த பொருளின் மலிவானவற்றையே அந்த துறையை கட்டுப்படுத்துபவர்கள் விற்கிறார்கள். இந்த போக்கை எதிர்க்கும் மனநிலையில் தனது படைப்பை அனுகுபவர் தான் இயக்குநர் ராம். அவரது படங்கள் மிகத் தீவிரமாக ஏதோ ஒரு வகையில் மனிதனின் சுதந்திரத்தை சிதைக்கும் அதிகாரத்தை கேள்வி கேட்கின்றன.
கலை சாமானியனின் அதிகாரம்
கற்றது தமிழ் படம் உலகமயமாக்கல் என்கிற போக்கு தன்னுடைய நிலத்தில் தன்னுடைய மொழியில் வேறுன்றி இருந்த ஒரு மனிதன் எப்படி தன்னுடைய நிலத்தில் அந்நியப்பட்டு போகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்த கதையை மக்களுடன் ஏதோ ஒரு வகையில் மக்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்றால் அது இந்தப் படத்தில் இருக்கும் ராம் என்கிற ஒரு தனிப்பட்ட மனிதனின் நேர்மையான கோபத்தினால் தான். வெளிச்சத்தைப் பார்த்த ஒரு மனிதர் இருட்டில் நடப்பது போல் நடிக்க முயற்சிப்பதே ராமிற்கு அவரது படங்களுக்குமான உரையாடல். இதில் அவர் வெற்றிபெறலாம் இதில் அவர் சோர்ந்து செயலாற்றாமல் போகலாம்.
ஆனால் ஒரு கலை வடிவத்தை மனித இனத்தின் மீட்சிக்கு பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கும் ஒரு தனி நபரின் எத்தனத்தை ராமிடம் ஒரு சாமானியனால் கூட உணர முடிகிறது என்பதே முக்கியம். தனது ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் நீண்ட இடைவேளி இருந்தாலும் மக்கள் மத்தியில் ஏதோ வகையில் ராம் என்கிற அந்த சாமானியன் புழங்கிக் கொண்டே இருக்கிறான். இன்று யூடியூபில் அதிகம் பார்க்கப்படும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிகம் பகிரப்படுவது ராம் பேசிய காணொளிகள் தான். குறிப்பாக இளம் தலைமுறையினர் ராமின் பேச்சால் வசீகரிக்கப்படுவது தன்னுடன் இருக்கும் சக மனிதன் தன் வாழ்க்கையில் இருந்து பேசும் உண்மைகளை தங்கள் வாழ்க்கையில் தொடர்புப்படுத்திக் கொள்வதால் தான்.
கலை என்பது எந்த அளவிற்கு ஒரு தனி நபர் சார்ந்த தேடலாக இருக்கிறதோ அதே கலை குறிப்பாக சினிமா என்பது அதே அளவிற்கு அதன் சமூக ஏற்பும் முக்கியமானதாக இருக்கிறது. ராமின் படங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவதன் முக்கிய காரணம் இதுதான், தன்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட புரிதல்களை எழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், ஆண் பெண், ஒடுக்கப்பட்டவன் ஒடுக்குபவன், கருப்பு வெள்ளை என அனைத்துத் தரப்பு மக்கள் முன்னிலையிலும் வைப்பதன் விளைவாக தான்.
இந்த ஒரு தனிப்பட்ட மனிதனின் தேடல் அனைவருக்கும் ஏற்றதான ஒரு பார்வையை ஒரு உண்மையை கண்டுபிடிக்காமல் போகலாம். அனைவருக்கும் சாதகமான ஒரு தீர்வை தனது படங்களில் ராம் தேடாமல் தனக்கு ஏற்ற உண்மையை அவர் முன்வைக்கலாம். ஆனால் அது தான் ஒரு சாமானியனாக ராம் எடுத்துக் கொள்ளும் அதிகபட்ச அதிகாரம். ராமின் எண்ணங்கள் மக்களிடம் ஏற்பைப் பெற்றிருக்கின்றன என்பதே அவர் சினிமாவுலகில் நிலைக்க காரணம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராம்..!