முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் முன்னதாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் முத்தையா, ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பேசிய நடிகை சித்தி இத்னானி, எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுங்கள்” என்றார்.  அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்யா, “முந்தையாவுக்கு நன்றி. கிராமத்து ஆக்சன் கதை நடிக்க ஆசையாக இருந்தது. அதனால் இப்படத்தை நடிக்க சம்மதித்தேன்.


முத்தையா போன்ற இயக்குநர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர். இப்படத்தில் நான் நடித்ததை எனது அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன். இது மாதிரி ஊர் பக்கம் நடக்குமா என நான் நிறைய இடங்களில் கேட்பேன், கதையை மீறி அவர் நிறைய காட்சிகளைப் பகிரும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.


கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் ஆழமாக இருக்கும். என்னைவிட நாயகிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். “என் படத்தில் ஹீரோ கத்தி பேசணும், இல்லனா கத்தில பேசணும்” என்று இயக்குநர் சொன்னார். இரண்டு மாதங்கள் கோவில்பட்டியில் இருந்து படம் எடுத்தோம். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். 


படத்தில் இருக்கும் உறவு, நன்றிக்கடன் ஆகியவற்றை நான் எங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிகம் பார்த்துள்ளேன், இந்தப் படத்துக்கு மிக மிக நன்றி. இது ஒரு பரப்பரப்பான டீம்.  ஜிவி‌யிடம் கேட்டேன் நான்தான் இந்தப் படத்தில் ஹீரோ இவ்வளவு ஹெவியா பாட்டு போட்டு இருக்க என்று கேட்டேன். படத்தின் பாடல்கள் தான் முதலில் படப்பிடிப்பு செய்தனர்" எனப் பேசினார்.


முன்னதாக படம் குறித்துப் பேசிய இயக்குநர் முத்தையா, “எனது ஒவ்வொரு படத்திலும் உறவுகளைப் பற்றி சொல்லியுள்ளேன். இதில் உறவுகளிடம் நன்றி இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். நன்றி இருந்தால் உறவுகளில் பிரச்சினை இருக்காது என்று சொல்லியுள்ளேன்.


மீண்டும் கொம்பன் படத்துக்கு பிறகு ராமநாதபுரம் படத்தை பற்றி சொல்லியுள்ளேன். கதைக்களம் ராமநாதபுரம் தான். இப்படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது.


இதனை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளனர். பிரபுவின் கதாபாத்திரம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். எனக்கு தயாரிப்பாளர்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது" எனப் பேசியுள்ளார்.