ஜியோ பேபி


மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஜியோ பேபி. மம்மூட்டி ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான காதல் தி கோர் படத்தை இயக்கியுள்ளார் ஜியோ பேபி. முதல் படத்தைப் போலவே இரண்டாவது படம் பரவலான கவனம் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் இந்த ஆண்டின் முக்கியத்துவம் வாய்ந்த படமாக காதல் தி கோர் படம் கருதப்படுகிறது.


தன்பாலின ஈர்ப்பு கொண்ட கதாநாயகனாக மம்மூட்டி இந்தப் படத்தில் நடித்துள்ளது . தன்பாலின ஈர்ப்பு கொண்டு ஒருவரின் உளவியல்  நெருக்கடிகள் ஒரு குடும்ப சூழலில் எந்த மாதிரியான குழப்பங்கள் சிக்கல்கள் ஏற்படும் என்பதை எதார்த்த தளத்தில் பதிவு செய்திருந்தார் ஜியோ பேபி. 


கசப்பான அனுபவம்






சமீபத்தில் ஜியோ பேபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்றுடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்  ஒன்றைப் பகிர்ந்துள்ளார் அவர். கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஃபாரூக் கல்லூரியில் திரைப்பட அமைப்பு சார்பாக மலையாள சினிமா குறித்து பேசுவதற்காக தான் அழைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிகழ்விற்காக தன்னுடைய முக்கியமான வேலைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தான் கோழிக்கோட்டிற்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.


ஆனால் சென்ற இடத்தில் கல்லூரி நிர்வாகத்திடம் தனக்கு ஒரு அழைப்பு வந்தது . அந்த அழைப்பில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக முறையான காரணங்கள் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடம் இருந்து தனக்கு ஒரு ஃபார்வட் மெசேஜ் வந்ததாகவும், அந்த செய்தியில் கல்லூரியின் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால் இந்த விழாவில் அவரை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்.


தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே தான் இந்த வீடியோவை வெளியிடுவதாகவும், மேலும் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் இப்போது அமைதியாக இருந்தால் தன்னைப்போன்றே இன்னொருவர் பாதிக்கப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.