கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள காந்தாரா படத்தை பார்த்த காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின்  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி  பாராட்டி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.


அதன் தாக்கம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.   






இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். மேலும் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காந்தாரா படத்தின் தாக்கம் காரணமாக  கர்நாடக அரசு  60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு  மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை  காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின்  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி  பார்த்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


அந்த வீடியோவில் பேசிய அவர், “ காந்தாரா படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறேன். நான் இதை சொல்லியே ஆகவேண்டும். நிச்சயம் அது பேரனுபவம். நிச்சயம் இது ஒரு தனித்துவமான அனுபவம். நீங்கள் இது போன்ற படத்தை பார்த்திருக்க முடியாது. எனக்கு தெரியவில்லை. நான் இது போன்ற படத்தை பார்த்ததில்லை. ரிஷப் ஷெட்டிக்கு என்னுடைய பாராட்டுகள். நீங்கள் இந்தப்படத்தில் மிகப்பெரிய வேலையை செய்திருக்கிறீர்கள்.


நான் உங்களிடம் நாளை பேசுகிறேன். ஆனால் படம் குறித்தான என்னுடைய அனுபவத்தை என்னால் பகிர முடியாமல் இருக்க முடியவில்லை. ‘காந்தாரா’ திரைப்படம் முழுக்க நம்முடைய நாட்டுப்புறக்கலை நிறைந்தது. இதைப் பார்க்கும் போது நாவல் படிப்பது போல இருந்தது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி நான் எங்கேயும் பார்த்தது இல்லை. படம் பார்க்காதவர்கள் தீபாவளி முடிந்த பிறகு முதலில் படம் பாருங்கள். காந்தாராவின் மியூசிக், ஆர்ட், சிறந்த ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பு. காந்தாரா படம் ஒரு “மாஸ்டர் பீஸ்”  என விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார்.