‛‛போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு

பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு...’


இந்த பாடல் கேட்காத காதுகள் இருக்குமா? ஏ.ஆர்.ரஹ்மானும், சொர்ணலதாவும், பாரதிராஜாவும், வைரமுத்துவும்  கலந்த கலவை தான் இந்த டானிக். இந்த கூட்டணி பல படங்களை தந்திருக்கிறது. அதில் முக்கியமான படம் ‛கருத்தம்மா’. 


தென்மாவட்டங்களில் நிலவும் பெண் சிசு கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கருத்துள்ள காவியம். பெரிய தாக்கத்தையும், விழிப்புணர்வையும் சமூகத்தில் ஏற்படுத்திய படம். பாரதிராஜா என்கிற மண்வாசனை கொண்ட கவிஞனின் காலத்தில் அழியாத பல படைப்புகளில் கிரீடம் போன்றது கருத்தம்மா. இரண்டாம் கட்டம் கூட கிடையாது, மூன்றாம் கட்ட நடிகர்களை வைத்து ஒரு படத்தை எடுத்து, அதில் வெற்றியும் பெறுவதெல்லாம் பாரதிராஜா போன்ற மக்கள் கலைஞனால் தான் சாத்தியம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த திரைப்படம். 






ஒரு ஏழை கூலிக்கு அடுத்தடுத்து பிறக்கும் பெண் குழந்தை. கொலை செய்ய கொடுத்த பெண் குழந்தை, பிந்நாளில் டாக்டராகி, அதே கிராமத்திற்கு வந்து உயிருக்கு போராடும் தன் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் திரைக்கதை. மற்றொரு பெண், வீட்டில் இருந்தே தன் தந்தையை கவனித்து வரும் கடமை. இப்படி பெண் குழந்தைகள் தன்னை வெறுத்து ஒதுக்கும் தந்தைக்கு எவ்வாறெல்லாம், எந்த வழியில் எல்லாம் உதவுகிறார்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல கூறும் கிராம மண்ணின் மறுபக்கம் தான் கருத்தம்மா. 


தன் தாய் கருத்தம்மாவின் பெயரை இந்த படத்திற்கு சூட்டி, தன் பொறுப்பை அதிகரித்துக் கொண்டார் பாரதிராஜா. ராஜா, ராஜஸ்ரீ, மகேஸ்வரி, ஆர்.சுந்தர்ராஜன், வடிவேலு என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் தேர்வு. எம்.ரத்னகுமார் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார் பாரதிராஜா. 


மக்கள் பாராட்டை மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற கருத்தம்மா; விருதுகளை வென்று குவித்தது. குறிப்பாக தேசிய விருதை பெற்று அசத்தியது. சிறந்த பின்னணி பாடகிக்கான சில்வர் லோட்டஸ் விருதை பாடகி ஸ்வர்ணலதாவும், சிறந்த பாடலாசிரியர் சில்வர் லோட்டஸ் விருது கவிஞர் வைரமுத்துவுக்கும், சிறந்த வட்டார மொழி திரைப்படத்திற்கான சில்வர் லோட்டஸ் விருது என விருதுகளை அள்ளிக் குவித்தது கருத்தம்மா.


1994 நவம்பர் 3 ம் தேதி இதே நாளில் வெளியான கருத்தம்மா திரைப்படம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், பெண்களின் பெருமை பற்றியும் பேசி, பெண்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆண்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படம். அது காலத்தின் கட்டாயமாகவும் இருந்தது. 


படம் வெளியாகி 28 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், இன்றும் எங்கோ ஒரு இடத்தில் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருப்பது தான் வேதனைக்குரிய விசயம். இது மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் என்கிற குரலை முதலில் உயர்த்திப்பிடித்த கருத்தம்மாவை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வோம்.!