இன்று நவீன சினிமா இயக்குநர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த படங்களின் வரிசையில் பராசக்தி படத்தை நிச்சயம் குறிப்பிடுவார்கள்.
1952 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதினார் கருணாநிதி. அவரது சினிமா கரியரில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் பராசக்தி.
பராசக்தி
வாழ்க திராவிடம் என்கிற பாடலில் இருந்து தொடங்குகிறது படம். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளால் தமிழ் நாட்டில் இருந்து தங்கள் குடும்பங்களை விட்டு பலர் பர்மாவிற்கு பிழைக்க செல்கிறார்கள். அப்படி சென்ற குடும்பம் தான் குணசேகரனுடைய (சிவாஜி) குடும்பம். பர்மா சென்று செல்வ செழிப்பாக வாழ்கிறது அவரது குடும்பம் தனது இரு அண்ணன்களின் வளர்ப்பில் வளரும் குணசேகரனுக்கு சொகுசாக வாழ்க்கையைத் தவிர எதுவும் தெரியாது.
தமிழ்நாட்டில் இருக்கும் தனது தங்கையின் கல்யாணத்திற்கு கடும் போர் நிலவி வந்த சூழலில் கிளம்பி செல்கிறான் குணா. ஆனால் சென்னை வந்ததும் ஒரு பெண்ணால் ஏமாற்றப்படுகிறான். மதுரையில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் எனப் போராடுகிறான். அதே நேரத்தில் குணாவின் தங்கை ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்து, ஒரு விபத்தில் தனது கணவனையும் இழக்கிறாள்.
பர்மாவில் போர்ச்சூழல் தீவிரமடைந்த காரணத்தினால் நடைபயணமாக தமிழ்நாட்டிற்கு பயணப்படுகிறார்கள் தமிழர்கள். அதில் குணாவின் இரண்டு அண்ணன்களும், அண்ணியும் அடக்கம். இந்தப் பயணத்தில் குணாவின் இரண்டாவது அண்ணன் உயிரிழக்கிறார். பிழைப்பிற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குணசேகரன் பைத்தியமாக நடிக்கத் தொடங்குகிறான்.
இறுதியாக தனது தங்கையை அடையாளம் கண்டு அவளது நிலையை உணர்ந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்கிறான் குணசேகரன். இப்படியாக கதை நகர படத்தின் இறுதியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குணா பேசும் வசனங்களும் வார்த்தைகளும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படம் அனைவராலும் பேசப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளன.
சாமானிய மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் பார்த்து கேள்வி எழுப்பிய காட்சியை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது கருணாநிதி தான் . அன்னியன், ரமணா, முதல்வன், கத்தி, என அரசியல் பேசிய எந்தப் படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டாலும் அந்தப் படங்களில் கதாநாயகன் பேசும் வசனங்கள். தொனி, வார்த்தைகளின் பிரயோகம் என அனைத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தப் படம் ‘பராசக்தி’.
தனது வசனங்களின் மூலம் தீண்டாமை, சமூக சீர்கேடுகள் பெண் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தையும் கேள்விகளுக்கு உட்படுத்தினார் கருணாநிதி. மேலும் திராவிடம் குறித்தான சிந்தனைகளையும், மக்களுக்கு பகுத்தறிவு குறித்தான விழிப்புணர்வையும் புரட்சிகரமான தொனியில் இப்படம் மூலம் கொண்டு சேர்த்தார் கருணாநிதி.