ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மஹான் ஆகிய இரு படங்களுன் ஓடிடியில் வெளியாகிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிகர்தண்டா திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாகியது. அதே போல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தோஷ் நாராயாணன் இசையில் வெளியாகிய படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களைக் கவர்ந்த காட்சிகள்


ஜிகர்தண்டா படத்தில் பல்வேறு காட்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளன. இடைவேளைக் காட்சி, க்ளைமேக்ஸ்  காட்சிகள் பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டி பேசியுள்ளார்கள்.  நடிகர்கள் மட்டுமில்லாமல் இந்தப் படத்தில் வரும் யானைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெரும்பான்மையான உணர்வுப் பூர்வமான காட்சிகளில் யானைகள் வருகின்றன. இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துகொண்டார். 


சினிமாவை மதித்து செய்ய வேண்டும்


”எனக்கு எப்போதும் ஆழமான ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஜிகர்தண்டா படத்தில் ஒரு பெட்டிக் கடைக்காரர் ஒரு டயலாக் பேசுவார்.  வாய்ப்பு என்பது ஒரு தேவதை மாதிரி. அதை மதித்தால் அது திரும்ப திரும்ப வரும். இதே வசனத்தை நாம் சினிமாவுக்கு பொறுத்தலாம் . 


சினிமா என்கிற  கலையை நாம் அதை மதித்து செய்ய வேண்டும். அது நமக்கு தெரிந்துவிட்டது என்று நினைத்தால் அது நமக்கு வராது.  நாம் என்னதான் எழுதி வைத்துக் கொண்டு போனாலும் நாம் நினைத்தது எல்லாம் நடப்பது நம் கையில் இல்லை. உதாரணத்திற்கு படத்தின் யானைகள் வரும் காட்சியில் அந்த யானைகள் எல்லாம் பழக்கப்படுத்தப்பட்டவை என்றாலும் அந்த காட்சியில் அந்த யானைகள் எல்லாம் உணர்ச்சிவசமாக அந்த காட்சியில்  நடித்தது.  யானைகளுக்கு நான் கார்த்திக் சுப்பராஜ் படம் அதனால் நடித்து விட வேண்டும் என்பது எல்லாம் தெரியாது.  அதுக்கு தோனவில்லை என்றால் அது நடிக்காது. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும் . நடிகர்களுக்கு டேட்  போட்டு நடிப்பது போல் நாங்கள் யானைகளுக்கு டேட் போட்டு படம்பிடித்தோம் . அந்த யானை வந்து நாங்கள் எதிர்பார்த்ததை மீறி ஒன்று செய்தது. அது சினிமா எனக்கு கொடுத்ததாக தான் நான் பார்க்கிறேன். சினிமாவை வேலையாக பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் அது நீடிக்காது “ என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.