ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா , நிமிஷா சஜயன் , நவீன் சந்திரா , சஞ்சனா நடராஜன் , ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜிகர்தண்டா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதே மாதிரியான ஒரு கேங்ஸ்டர் படத்தையே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்தப் படத்தின் முதல் பாதியை தனது ஸ்டைலிலும் இரண்டாவது பாதியை முற்றிலும் உணர்வுப் பூர்வமாக அமைத்து ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ். சமூக கருத்துள்ள ஒரு பிரச்சனையை சினிமா என்கிற கலை வடிவத்தின் மீது உள்ள தனது ஆர்வத்தையும் இணைந்து மிக நேர்த்தியான ஒரு கதையை உருவாக்கினார் கார்த்திக் சுப்பராஜ். காஞ்சனா சீரிஸ் படங்களில் ராகவா லாரண்ஸின் ஒரே மாதிரியான நடிப்பை பார்த்து பழக்கப் பட்ட ரசிகர்களுக்கு இப்படத்தில் ராகவா லாரன்ஸ் புதிய கண்ணோட்டத்தில் தெரிந்தார். அதேபோல் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பும் இந்தப் படத்தில் மிக நுட்பமாக வெளிப்பட்டிருந்தது. சந்தோஷ் நாராயணனின் இசை , நிமிஷா சஜயன் என இப்படி இப்படத்திற்கு எல்லா அம்சங்களும் சாதகமாக அமைந்து இப்படத்தை ப்ளாக் பஸ்டர் வெற்றிபெறச் செய்தன.
ஜப்பானில் ஹவுஸ்ஃபுல்
ஜிகர்தண்டா படம் வெளியாகி கிட்டதட்ட 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இப்படம் ஜப்பன் திரையரங்கில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜப்பான் ரசிகர்களிடம் எப்போது தமிழ் படங்களுக்கு குறிப்பாக ரஜினிகாந்த் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது . ரஜினிகாந்த் தவிர்த்து அடுத்தபடியாக விஜய் படங்களும் ஜப்பானில் கவனம் பெற்று வருகின்றன. இப்படியான சூழலில் பிற நடிகர்களின் படங்களும் ஜப்பானில் ஓடுவது அதுவும் ஹவுஸ் ஃபுல்லாவது என்பது ஒரு சில நல்ல தமிழ் படங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய மரியாதையே.
சூர்யா 44
ஜிகர்தண்டா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. வரும் மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.