மெய்யழகன்
ஜப்பான் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்தபடியாக நடித்துள்ள படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி , அரவிந்த் சாமி , ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மெய்யழகன் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கவனமீர்க்கும் கமல் பாடிய பாடல்
ஒரு பக்கம் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் படங்களில் கார்த்தி அசத்தி வருகிறார் . மறுபக்கம் கொம்பன் , கடைக்குட்டி சிங்கம் போன்ற ஃபேமிலி சப்ஜெக்ட் படங்களுக்கு எப்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மெய்யழகன் படமும் அந்த மாதிரி கிராமத்தை மையப்படுத்திய ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி படம் குறித்து இப்படி கூறியுள்ளார் “
”நான் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்யவில்லை. வித்தியாசமாக கதைகளை தான் தேர்வு செய்து நடிக்கிறேன். இந்தப் படம் தஞ்சாவூரை சார்ந்த படம். இந்தப் படம் 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. படம் பற்றி நானும் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படம் எமோஷனாலாக இருக்கும். நாம் எல்லாரும் எமோஷனா ஆட்கள் தான்” எனத் தெரிவித்தார்.” என கார்த்தி தெரிவித்தார்
மெய்யழகன் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் யாரோ இவன் யாரோ என்கிற பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். இப்பாடலை பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி எழுதியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலில் குரலில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.