ஆளைப்பார்த்து எடை போடக் கூடாது என்று யோகி பாபு பற்றி சிலாகித்து நடிகர் கார்த்தி பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.


அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'ராஜா ராணி' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாக்யராஜ் கண்ணன். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரெமோ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகிபாபு கார்த்தி பேசியது தான் பிரபலமாகி வருகிறது.


யோகிபாபு வெறும் காமெடியின் என்று நினைத்துவிடாதீர்கள். அவருடைய படங்களில் யாமிருக்க பயமேன் படத்தைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்த்தபோது தான் யோகி பாபு எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதைத் தெரிந்து கொண்டேன். லொல்லு சபா நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எழுதியவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவருடைய சிறப்பே இன்ஸ்டன்ட்டா ரிப்ளை கொடுப்பது தான். ஒரு முறை அவருக்கு நான் ஃபோன் பண்ணியிருந்தேன். என்ன பண்றீங்கன்னு கேட்டால், நான் மொட்டைமாடியில் கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்றேன்னு சொன்னாரும். இருங்க எஸ்.பி.கிட்ட சொல்றேன்னா ஏன் சார் அவர் நல்லா பவுலிங் போடுவாரா என்று கேட்கிறார்.


இப்படி எதற்கெடுத்தலாம் கவுன்ட்டர் கொடுத்து அவர் இருக்கும் இடத்தையே மகிழ்ச்சியாக வைத்திருப்பார். நடிகர் சங்க விழாவிற்கு கூப்பிட்டால் கால்பந்து விளையாடி கலக்குகிறார். கிரிக்கெட் விளையாடுகிறார். நன்றாக நடிக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கலக்குகிறார். ஆளைப் பார்த்து ஒருவரை எடை போடக் கூடாது என்பதை நான் யோகி பாபுவை வைத்தே நிஜத்தில் உணர்ந்து கொண்டேன் என்றார்.




யோகி பாபு 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்கு  அறிமுகமானார். வேலாயுதம், தூங்கா நகரம், கலகலப்பு, அட்டகத்தி, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமேன், டிமான்ட்டி காலனி, வேதாளம், காக்கா முட்டை, குலேபகாவலி, தானா சேர்ந்த கூட்டம், கலகலப்பு 2, பலூன், கோலமாவு கோகிலா, மண்டேலா, பரியேறும் பெருமாள், டிக்கிலோனா, நவரசா, அனபெல் சேதுபதி என நூற்றுக் கணக்கான படத்தில் நடித்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம், பட்டு நகரான ஆரணிக்கு அருகில் பெரணமல்லூர் அருகில் உள்ள வாழைப்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நகரம்பேர் கிராமத்தை சேர்ந்தவர் யோகிபாபு. இவரது அம்மா தனது மூத்த மகனுடன் கிராமத்தில் தான் உள்ளார். இவரது உடன்பிறந்த அண்ணன் ராஜா குறிச்சொல்லும் சாமியாராக கிராமத்திலேயே உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் யோகிபாபு மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு அண்மையில் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது