நடிகர் கார்த்தி ராஜூமுருகன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 



ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஜப்பான். இந்தப்படத்தை  ‘குக்கூ’ ‘ஜோக்கர்’  ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கி உள்ளது. கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.




இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க இருக்கிறார். இதுமட்டுமன்றி, புஷ்பா படத்தில் மங்களம் சீனு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய சுனில், ஒளிப்பதிவாளரும், கோலி சோடா', 'கடுகு' ஆகியத்திரைப்படங்களை இயக்கியவருமான இயக்குநர் விஜய்மில்டன் ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.  




 ‘காற்று வெளியிடை’,  ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் இந்தப்படத்தில் எடிட்டராக கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் இயக்குநர் ராஜு முருகன் மேற்கொண்டு வந்திருக்கிறாராம். விரைவில் 'ஜப்பான்' படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாமாம்.