வெற்றிமாறன்


2023 ஆண்டு பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் யூடியூப் சானல் ஒன்று ஒருங்கிணைத்த நேர்காணலில் கலந்துகொண்ட வெற்றிமாறன், விடுதலை படம் தொடங்கி உருவான பின்னணியை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர், நடிகை கொங்கனா சென், மலையாள இயக்குநர் ஜியோ பேபி, கன்னட இயக்குநர் ஹேமந்த், தமிழில் நெல்சன் திலீப்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.


4 கோடியில் தொடங்கிய படம்


‘விடுதலை’ படம் தொடங்கிய விதம் குறித்து வெற்றிமாறன் "எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதி என்கிற சிறுகதையைத் தழுவி நான் ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். ஆனால் ஜெயமோகனிடம் பேசியபோது அந்தக் கதையை திரைப்படமாக்கும் உரிமத்தை தான் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டதாக கூறினார்.


நான் அவரிடம் நான் எழுதியிருந்த 20 பக்க திரைக்கதையை படிக்கச் சொல்லி இது தொடர்பாக வேறு ஒரு கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்டேன். தான் முன்னதாக இதே மாதிரியான ஒரு கதை எழுதியிருப்பதாகக் கூறி துணைவன் என்கிற கதையை அவர் எனக்கு படிக்க கொடுத்தார்.

முதலில் இந்தப் பாடத்தில் சூரி மட்டுமே நடிக்க இருந்தது. குறுகிய காலத்தில் 4 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை எடுக்க நான் திட்டமிட்டேன். ஆனால் படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்கி வெறும் 10 சதவீதம் வேலைகள் முடிந்தபோது இந்தப் படத்திற்கு 16 கோடி ரூபாய் செலவு ஆகியிருந்தது. நாங்கள் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த மலையில் வாகனம் செல்ல முடியாததால் நாங்கள் 200 பேர் அந்த மலைக்கு நடந்து செல்ல வேண்டியதாக இருந்தது.


அங்கேயே தங்குவதற்கு சாப்பிடுவதற்கும் கூடாரங்களை அமைத்தோம். 200 பேர் பயன்படுத்தக் கூடிய வகையில் 10க்கும் மேற்பட்ட கழிவறைகளை அமைத்தோம். இது எல்லாம் சேர்ந்து முடித்த பின் திடீரென்று வந்த புயல் எங்கள் கூடாரங்களை சேதப்படுத்தியது. ஏற்கனவே பொருட்செலவு அதிகம் ஆனதால், நான் தயாரிப்பாளரிடம்  எதிர்பார்த்ததை விட இன்னும் சில காலம் ஆகலாம் என்று சில காலத்திற்கு படப்பிடிப்பை ஒத்திவைக்க திட்டமிட்டேன்.

தயாரிப்பாளர் எல்ரட் குமார் என் மீது இருந்த நம்பிக்கையில் எனக்கு தேவையான சுதந்திரத்தை கொடுத்தார். இதற்கு அடுத்ததாக இந்தப் படத்தின் கதை இன்னும் பேரிதானது. அப்போது விஜய் சேதுபதி உள்ளே வந்தார். தயாரிப்பாளர் சம்மதித்தார். இதற்கு அடுத்து படப்பிடிப்பிற்கு வேறு ஒரு மலைக்கு சென்றோம். விஜய் சேதுபதியிடம் மொத்தம் 18 நாட்கள் மட்டுமே முதலில் கால்ஷீட் கேட்டேன்.


ஆனால் அவர் முதல் பாகத்திற்கு மட்டும் 70 நாட்கள் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் எனக்கு தேவை என்று தோன்றும் எல்லா காட்சிகளையும் எடுத்துக்கொண்டிருந்தேன் எழுதவும் செய்தேன். இந்தப் படத்தை ஒரு பாகமாக எடுக்க முடியாது என்று தோன்றியது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளரிடம் இதை சொன்னபோது அவர் அதற்கும் சம்மதம் தெரிவித்தார். பின் படத்தை இரண்டு பாகங்களாக பிரிக்க முடிவு செய்தோம். படத்தில் இடைவேளைக் காட்சியாக இருந்த ஒரு சிறிய பகுதி பிரம்மாண்டமாக முதல் பாகத்தின் க்ளைமேக்ஸாக எடுக்கப்பட்டது.


8 நிமிட தொடர் காட்சி


விடுதலை படத்தின் தொடக்கத்தில் வரும் ரயில் விபத்து காட்சி மட்டுமே 8 நிமிடங்களுக்கு மேல் நீளமானது. இந்தக் காட்சி உருவான விதம் குறித்து பேசிய வெற்றிமாறன் "முதலில் அந்த ரயில் விபத்துக் காட்சியை டைட்டிலுக்கு பின் வெறும் ஒலியாக மட்டும் வைப்பது தான் என்னுடைய திட்டமாக இருந்தது. இடையிடையில் அந்த நிகழ்வு தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த தகவல்களை வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனான் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்தப் படத்திற்கான செலவுகள் ஏற்கெனவே அதிகம் ஆகிவிட்டது . இன்னும் கொஞ்சம் செலவு செய்து இந்த காட்சிகளையும் எடுத்துவிடலாம் என்று சொன்னார்.

இந்தக் காட்சிக்காக 2 நிஜ ரயில் பெட்டிகளை பயன்படுத்தினோம். கூடுதலாக இன்னும் சில பெட்டிகளை நாங்களாக உருவாக்கினோம். அதன் எடை மட்டுமே ஒன்றரை டன் இருக்கும். இந்த வேலைகள் மூன்று மாத காலம் நடைபெற்றன. இந்த ஒரு காட்சியை எப்படி எடிட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் ஒரே காட்சியாக இதை எடுக்க திட்டமிட்டேன்.


மொத்தம் 8 நாட்கள் இந்தக் காட்சிக்காக ஒத்திகை பார்த்தோம். அப்போது ஒரு இடைவேளையின்போது போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஃபைட்டர் ஒருவர் ஒத்திகை பார்த்தபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். அதன் பிறகு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி பின் தொடங்கினோம். இந்த ஒரு காட்சிக்கு சுமார் 8 கோடி ரூபாய் செலவானது.


4 கோடியில் தொடங்கிய இந்தப் படம் கடைசியாக 60 கோடியில் முடிவடைந்தது” என்று வெற்றிமாறன் கூறினார். இந்தக் கதையை கேட்ட பிற இயக்குநர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர். குறிப்பாக ஒரு இயக்குநருக்கு இவ்வளவு படைப்பு சுதந்திரம் அளித்த அந்த தயாரிப்பாளர் ஒரு கடவுள் என்று இயக்குநர் கரண் ஜோகர் கையெடுத்து கும்பிட்டே விட்டார். உடனடியாக தான் சென்னைக்கு புறப்பட்டு வந்து எல்ரெட் குமாரை சந்திக்கப் போவதாக நகைச்சுவையாக கூறினார் அவர்.