பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கி ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்திருக்கும் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டில் மிகப்பெரிய லவ் ஸ்டோரியாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 28-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


கடந்த 25 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் இயக்குநராக இருந்து வருபவர் கரண் ஜோஹர். Kuch kuch hota hei, kabhi kushi kabhi gum,  ye jawaani hai deewani ஆகிய படங்களை இயக்கியவர். பாலிவுட்டின் கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படுகிற கரண் ஜோஹர் தற்போது இயக்கியிருக்கும் படம்  ராக்கி  ஆர் ராணி கி பிரேம் கஹானி ( rocky aur rani kii prem kahani). ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தர்மேந்திரா, பிரீத்தி ஜிந்தா ஆகியவர்களும் நடித்துள்ளார்கள். தர்மா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


ராகி ஆர் ராணி கி பிரேம் கஹானி


ராக்கி மற்றும் ராணி ஆகிய இருவேறு குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். எல்லோரையும் போல் இவர்களின் சந்திப்பும் ஆரம்பத்தில் மோதலில்தான் தொடங்குகிறது. பின் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. பிறகு என்ன பிரச்சனை படம் முடிந்துவிட்டதே என்று நாம் நினைப்பதற்குள் உண்மையான பிரச்சனை என்ன வென்று தெரிகிறது.


ராக்கி மற்றும் ராணி ஆகிய இருவரும் இணைய வேண்டுமானால் இந்த இருவரின் குடும்பமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இந்த காதல் ஜோடியைப்  போலவே இவர்களின் குடும்பமும் வெவ்வேறு குணங்கள் கொண்டவர்கள். இந்த இரண்டு வீட்டார்களையும் சம்மதிக்க வைக்க இவர்கள் கண்டுபிடிக்கும் வழி என்னத் தெரியுமா?


பூவெல்லாம் கேட்டுப்பார்


சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் பிரிந்துபோன இரண்டு  நண்பர்களை சேர்க்க சூர்யா ஜோதிகா வீட்டிற்கும், ஜோதிகா சூர்யா வீட்டிற்கும் செல்வது மாதிரி, ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் பின்பற்றுகிறார்கள். இவர்கள் இந்த இரு வீட்டாரிடமும் நல்ல பெயர் எடுக்கிறார்களா? அதில் அவர்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள்? என்ன என்ன காமெடிகள் அங்கு நடக்கப்போகின்றன என்பதே மிச்ச கதையாக இருக்கிறது.


படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் படம் வெளியாகி  “இத தான் ராத்திரி பூரா உக்காந்து ஒட்டிகிட்டு இருந்தியா “ என்கிற ஃபீல் வராமல் இருந்தால் சரி.