தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் கங்கை அமரன். இயக்குநராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சாதித்தவர். சினிமா துறையில் பன்முக கலைஞராக வலம் வரும் கங்கை அமரன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு வெங்கட் பிரபு , பிரேம் ஜி என இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் , கனகா காம்போவில் , செந்தில் , கவுண்டமணி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது . குறிப்பாக படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி இன்றளவும் பிரபலம் . இந்த நிலையில் மேடை ஒன்றில் பேசிய கங்கை அமரன் , கரகாட்டக்காரன் படம் மற்றும் அந்த காமெடி எல்லாமே காப்பிதான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.


 






 



”கரகாட்டக்காரன்ல  வாழைப்பழ் காமெடி வரும் ..இதற்குறிய மூலக்காரணம் முன்னோர்கள்தான். சிலர் அந்த வாழைப்பழ காமெடி எத்தனை அருமையானது, அதை எப்படித்தான் யோசிக்குறாங்களோனு சொல்லுவாங்க. முன்னோர்கள் இல்லாம எதையுமே சொல்ல முடியாது. அப்படித்தான் எங்களுக்கும் முன்னோர்கள் நிறைய விட்டுச்சென்றிருக்கிறார்கள். தில்லானா மோகனாம்பாள் கதையை மாற்றி போட்டதும் கரகாட்டக்காரன் கதை உருவானது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒருவர் நாதஸ்வரம் வாசிப்பார், நாயகி பரத கலைஞர். இருவருமே நடன கலைஞராக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துதான் இந்த படத்தை எடுத்தோம். வாழைப்பழ காமெடி  நான் சின்ன வயதுல , மலையாள படத்துல பிளாக் அண்ட் ஒயிட்ல பார்த்த ஒரு காமெடி. இது கற்பனை அல்ல. இது உழைக்காம கிடைத்த வெற்றி. அண்ணனுக்கு ஜே படத்தையும்  அதே சமயத்துலதான் இயக்குனேன். அதுக்கு அவ்வளவு மெனக்கெடல்கள் பண்ணேன். இரண்டும் ஒரே சமயத்துலதான் வெளியானது. ஆனால் உழைப்பே கொட்டாத கரகாட்டக்காரன் படம் ஹிட் ஆனது அண்ணனுக்கு ஜே எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யலை “ என்றார் கங்கை அமரன்.