நேரடி இந்தி படங்களில் பணியாற்ற விருப்பமில்லை என காந்தாரா படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. 


பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம்  நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். வசூலில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ள காந்தாரா படத்தை ரஜினிகாந்த் தொடங்கி அனைத்து மொழி திரைத்துறையினரும் பாராட்டி இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்தியிலும் இப்படம் ரூ.62 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் பாலிவுட்டில் நடிக்க ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு வந்தது. 






ஆனால் நேரடி இந்தி படங்களில் பணியாற்ற விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் ஒரு பெருமைமிக்க கன்னடர். கன்னடத் திரையுலகினரும், கன்னட மக்களால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். ஒரு படம் ஹிட் ஆனதால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் மாற மாட்டார்கள். எனது கரு கன்னட சினிமாவில் உள்ளது என தெரிவித்துள்ளார். 


மேலும் காந்தாரா படத்தின் வெற்றி எதிர்காலத்தில் தனது திரைப்படங்களை உருவாக்கும் முறையை மாற்றப் போவதில்லை என்றும், மக்கள் விரும்பினால் நான் இந்தியில் டப் செய்து வெளியிடுவேன். இல்லையென்றால் கர்நாடகாவில் ம்ட்டும் தான் வெளியிடுவேன். நான் காந்தாரா படத்தை பேன் இந்தியா படமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கவில்லை.  நாடு முழுவதும் படம் பற்றி மக்கள் பேசும் சூழல் எப்படி நடந்தது என்பது கூட எங்களுக்குத் தெரியாது என ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.